தனியார் பண்ணை வீட்டில் நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 6 பேர் கைது

தனியார் பண்ணை வீட்டில் நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராய்ப்பூர்,
பிரபல நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனங்களான ஹைபர் கிளப், எஸ்.எஸ்.பர்ம் ஆகியவை இணைந்து சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் நகரில் ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள தனியார் பண்ணை வீடு ஒன்றில் நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
இளைஞர்களுக்கான உயர்மட்ட கூட்டம் என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதில் கலந்துகொள்ளும் நபர் ஒருவருக்கு தலா ரூ.40 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அதே நேரம் காதல் ஜோடி, இளம் தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் என்று கட்டணம் நிர்ணயித்து இருந்தனர். மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் ஆடையின்றி பங்கேற்கலாம் என்றும், உயர் ரக மது, போதைப்பொருள் உள்ளிட்டவையும் அனுமதிக்கப்படும் என்றும் ரகசிய தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சி வருகிற 21-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இதுபற்றிய விவரங்களை சமூக வலைதளத்தில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டனர். ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் நாள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த தகவல் வெளியானதும் சத்தீஷ்கார் மாநிலத்தில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இந்த கலாசார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து இதுகுறித்து 2 வழக்குகளை பதிவு செய்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.