இந்திய எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற வங்காளதேச நாட்டினர் 26 பேர் கைது

மேகாலயாவில் அத்துமீறி நுழைய முயன்று கைது செய்யப்பட்ட வங்காளதேச நாட்டினரின் மொத்த எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது.
ஷில்லாங்,
மேகாலயாவில் மேற்கு கரோ ஹில்ஸ் பகுதி வழியே அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேச நாட்டினர் 26 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) இன்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
அவர்களுக்கு இந்தியாவுக்குள் நுழைவதற்கு உதவி புரிந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வந்த 3 வாகனங்களை, உளவு தகவலின் அடிப்படையில் பி.எஸ்.எப். போலீசார் வழிமறித்து சோதனை செய்தபோது கைது செய்தனர்.
அவர்களுக்கு இந்தியாவில் உள்ள நபர்களால் உதவிகள் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அனைவரும் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனால், இதுவரை மேகாலயாவில் அத்துமீறி நுழைய முயன்று கைது செய்யப்பட்ட வங்காளதேச நாட்டினரின் மொத்த எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது.
எல்லை வழியேயான ஊடுருவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கிடைத்த மிக பெரிய வெற்றி இது என பி.எஸ்.எப். படையினர் தெரிவித்தனர். மேகாலயா போலீசாருடன் இணைந்து பி.எஸ்.எப். போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.