கரும்பு தோட்டத்துக்குள் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது

சிறுமி தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு மில் அருகே வந்து கொண்டிருந்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி(மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த மாதம்(நவம்பர்) 21-ந்தேதி அந்த மாணவி வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அந்த மாணவி தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு மில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த மணிகாந்த் தின்னிமணி, ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகிய 2 பேரும் சிறிது தூரம் சிறுமியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுமியை குண்டுக்கட்டாக அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் தூக்கிச் சென்றனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் கரும்பு தோட்டத்துக்குள் வைத்து சிறுமியை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதையடுத்து வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறினாள். முதலில் பயந்த அவர்கள் பின்னர் தாமதமாக இதுபற்றி முர்கோடு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகாந்த், ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






