கற்களை வீசி சிறுத்தையை விரட்டிய 11 வயது சிறுவன் - உயிரை காப்பாற்றிய புத்தகப்பை

சிறுத்தை தாக்கியபோது முதுகில் புத்தகப்பை இருந்ததால் சிறுத்தையின் பிடியில் இருந்து சிறுவன் தப்பியுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் மயங்க் குவாரா. இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மயங்க் குவாரா பள்ளி முடிந்து வழக்கம்போல் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு சிறுவனும் வந்துகொண்டிருந்தார்.
அப்போது பாதையின் ஓரத்தில் இருந்த புதர்களுக்கு நடுவே பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவர்கள் மீது பாய்ந்தது. இதனால் நிலைகுலைந்து போன சிறுவரக்ள் இருவரும் செய்வதறியாது திகைத்தனர். இந்நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட சிறுவன் மயங்க், கீழே கிடந்த கற்களை எடுத்து சிறுத்தையின் மீது சரமாரியாக வீசினார்.
தொடர்ந்து 2 சிறுவர்களும் சத்தமாக கத்தி கூச்சல் போட்டுக்கொண்டே, கையில் கிடைத்த கற்களை தூக்கி சிறுத்தை மீது வீசினர். இந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் சிறுத்தை அங்கிருந்து ஓட்டம் பிடித்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் மயங்க்கின் கையில் சிறுத்தையின் நகங்கள் கீறியதால் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுவர்கள் இருவரையும் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுவன் மயங்க் அணிந்திருந்த புத்தகப்பை அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது. பின்புறத்தில் இருந்து சிறுத்தை தாக்கியபோது முதுகில் புத்தகப்பை இருந்ததால் சிறுத்தையின் பிடியில் இருந்து சிறுவன் தப்பியுள்ளார்.
அந்த ஒரு சில வினாடி நேரத்தில்தான் 2 சிறுவர்களும் சுதாரித்துக் கொண்டு சிறுத்தையை கற்களால் அடித்து விரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சிறுவர்களின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






