4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு எப்போது?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற, நெட் அல்லது செட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
சென்னை,
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், 3 ஆயிரத்து 921 காலிப்பணியிடங்கள் 79 பின்னடைவு காலிப்பணியிடங்கள் என 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் வெளியிட்டது.
தேர்வர்கள் தேர்வுக்கு தயாரான நிலையில், அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இதற்கான போட்டித் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற, மத்திய தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் செட் தேர்வானது மாநில அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. அந்தவகையில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடத்தியது.
இந்த தேர்வு முடிவு வெளியான பிறகே, 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.