சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
சென்னை,
சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறவுள்ள எதிர்கால மருத்துவம் 2.0 மாநாட்டிற்கான கையேடு மற்றும் வலைதளத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2025-2026-ம் ஆண்டிற்கான ஆயுஷ் மருத்துவப் பட்டப்படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்., பி.யூ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். மற்றும் பி.என்.ஓய்.எஸ். போன்ற பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு பட்டியலையும் வெளியிட்டுள்ளோம்.
ஏற்கனவே ஜூலை 17-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை பி.என்.ஓய்.எஸ். பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதேபோல் மற்ற ஆயுஷ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கும் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது, மொத்தம் 4,231 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 8-ந்தேதி காலை தொடங்குகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையவழியில் கல்லூரி விருப்பத்தேர்வு செய்வதற்கான காலம் 8-ந்தேதி காலை 10 மணி முதல் 11-ந்தேதி மாலை 5 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இணையவழி கல்லூரி விருப்பத்தேர்வு செய்வதற்கான காலம் வலைத்தளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
பி.என்.ஓய்.எஸ். அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் முதல் இரண்டு இடங்களை செ.பூமிகா (அரியலூர் மாவட்டம் 198.50 மதிப்பெண்கள்), ஆ.பிரதோசியா (தஞ்சாவூர் மாவட்டம், 198.50 மதிப்பெண்கள்) பெற்றிருக்கிறார். நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பித்து முதல் இரண்டு இடங்களை ஆ.பிரதோசியா (தஞ்சாவூர் மாவட்டம், 198.50 மதிப்பெண்கள்) ஆர்த்தி (தென்காசி மாவட்டம், 197 மதிப்பெண்கள்).
நீட் தேர்வு அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை டி.எஸ்.பிரகதி (கன்னியாகுமரி மாவட்டம், 520 மதிப்பெண்கள்), இனிய சுதர்சன் (மயிலாடுதுறை மாவட்டம், 512 மதிப்பெண்). அகில இந்திய இடஒதுக்கீடு விண்ணப்பித்தவர்களில் முதல் இரண்டு இடங்களை இனிய சுதர்சன் (மயிலாடுதுறை மாவட்டம், 512 மதிப்பெண்), ப.அனிதா (திருவள்ளுர் மாவட்டம், 504 மதிப்பெண்).
நிர்வாக இடஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தவர்களில் முதல் இரண்டு இடங்களை அக்சயா (கடலூர் மாவட்டம், 501 மதிப்பெண்கள்), உசேன் (சென்னை, 497 மதிப்பெண்கள்) ஆகியோர் பெற்றுள்ளனர்.
எதிர்காலம் மருத்துவம் 2.0 மாநாடு அக்டோபர் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடக்க உள்ளது.
தமிழ்நாட்டில் 35 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நாளை (இன்று) நடத்தப்பட இருக்கிறது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில், நாய்க்கடிக்கு ஏ.ஆர்.வி. மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.