முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு.. தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வி என தகவல்

தேர்வு எழுதிய 2 லட்சத்து 20 ஆயிரத்து 412 பேரில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ் தகுதித்தாள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
சென்னை,
முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1), கணினி பயிற்றுனர் (கிரேடு-1) பதவிகளில் 1,996 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கான இறுதி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் மற்றும் 1:1.25 என்ற விகிதாசார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் பாடவாரியாக தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.gov.in) வெளியிடப்பட்டு இருப்பதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றோர் அதற்கான அழைப்புக்கடிதம் மற்றும் இதர படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அவை தபால் மூலம் அனுப்பப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
முதுகலை ஆசிரியர் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடம், கல்வி உளவியல், பொது அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு 150 மதிப்பெண். அதேபோல் கட்டாய தமிழ் மொழித்தகுதித்தாள் தேர்வில் 30 கேள்விகளுக்கு 50 மதிப்பெண். தமிழ் தகுதித்ததாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் அதாவது 50-க்கு 20 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்வர்களின் பாட விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
அவ்வாறு தமிழ் தகுதித்தாள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என சொல்லப்படுகிறது. அதாவது தேர்வு எழுதிய 2 லட்சத்து 20 ஆயிரத்து 412 பேரில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ் தகுதித்தாள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.






