வருகைப்பதிவு குறைந்த மாணவர்கள் படிப்பை தொடருவதற்கு புதிய நடைமுறை


வருகைப்பதிவு குறைந்த மாணவர்கள் படிப்பை தொடருவதற்கு புதிய நடைமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 Nov 2025 1:58 PM IST (Updated: 19 Nov 2025 2:58 PM IST)
t-max-icont-min-icon

வருகைப்பதிவு குறைந்த மாணவர்கள் படிப்பை தொடருவதற்கான புதிய நடைமுறைக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 57-வது கல்வி சார்ந்த நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. துணை வேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பதிவாளர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். துணை வேந்தர் சந்திரசேகர் பேசுகையில், ‘நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தரமான கல்வி, கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவை மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க செயல்பட்டு வருகிறது’ என்றார்.கூட்டத்தில், கல்லூரியில் வருகை பதிவு குறைந்த மாணவர்கள் எப்போது தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும்? என்பது குறித்து விவாதம் நடைபெற்றது.அதாவது மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது உடல்நல பாதிப்பு அல்லது ஏதேனும் காரணத்தால் வேலை நாட்களில் 60 சதவீதத்துக்கு குறைவாக மட்டுமே வருகை பதிவு இருந்தால் அவர்கள் அந்த பருவ தேர்வு எழுத முடியாது. அதே பருவ தேர்வை மீண்டும் எழுதிய பிறகே அடுத்த பருவத்துக்கு செல்ல முடியும்.

ஆனால், இனிமேல் வருகை பதிவு குறைவுக்காக ஒரு பருவ தேர்வை எழுத முடியாதவர்கள், அடுத்தடுத்து ஆண்டில் தொடர்ந்து படித்து, அந்தந்த பருவ தேர்வுகளை எழுதலாம். இளநிலை பட்டப்படிப்பு என்றால் 3 ஆண்டுகள் தொடர்ந்து படிக்கலாம். 3 ஆண்டுகள் கல்லூரி படிப்பை முழுமையாக முடித்து விட்டு, விடுபட்ட குறிப்பிட்ட பருவத்துக்கு மட்டும் அந்த வகுப்பில் சேர்ந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறைக்கு உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு கல்லூரிகளில் தெரிவிக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட தீர்மானங்களுக்கும் அனுமதி வழங்கி நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story