மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழா

மீனாட்சி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவின் முதல் நாளில் டாக்டர். அமர் அகர்வால் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MAHER), அதன் ஒரு அங்கமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 அன்று அதன் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை நடத்தியது.
பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவரது தொலை நோக்குப்பார்வை நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை புரவலர் கோமதி. ஆர், இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர், துணை வேந்தர், பேராசிரியர். டாக்டர் C.ஸ்ரீதர், சார்பு துணை வேந்தர் பேராசிரியை டாக்டர் C.கிருத்திகா மற்றும் பதிவாளர் பேராசிரியை. டாக்டர். சுரேகா வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தனது வரவேற்பு உரையில், 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து MAHER-ன் பயணத்தைப்பற்றி பேசினார். மேலும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கடந்த ஆண்டில் MAHER அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். நிறுவனர் வேந்தர் ஏ. என். ராதாகிருஷ்ணனின் தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்ந்தார்.
சிறப்புரை ஆற்றிய இந்நிறுவனத்தின் இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் பேசும்போது, சமூகத்தை மாற்றும் வல்லமை கொண்ட கல்வி எனும் சிறப்பு மிக்க ஆயுதத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2024-25 கல்வியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை துணைவேந்தர் வழங்கினார். இதில் அங்கீகாரம் மற்றும் தரவரிசையில் நிறுவனத்தின் சாதனைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சாதனைகள், மாணவர்கள் முன்னேற்றம், சமூகப் பொறுப்பு முயற்சிகள் மற்றும் சமூகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான புகழ்பெற்ற கண் மருத்துவர் பேராசிரியர். டாக்டர். அமர் அகர்வால், பட்டமளிப்பு விழாவின் முதல் நாளில் (22.12.2025) தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழா உரையில், வாழ்நாள் முழுவதும் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பட்டதாரிகள் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஒழுக்கம் மூலம் வெற்றியைத் தொடர ஊக்குவித்தார்.
2 ஆம் நாள் சிறப்பு விருந்தினராக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான பேராசிரியர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர், (Director and Scientist 'G' at the Indian Council of Medical Research National Institute of Epidemiology) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவின்போது, வேலூர், கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் நிஹால் தாமஸ் அவர்களுக்கு நீரிழிவு நோய்த் துறையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, அறிவியல் முனைவர் பட்டம் (ஹானரிஸ் காசா) வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டமாணவர்கள் உட்பட மொத்தம் 1,257 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, 103 சிறந்த மாணவர்களுக்கு அவர்களது சிறந்த கல்வி செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கற்பதில் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். அய்யப்பனுக்கு சிறந்த மனிதநேய சேவைக்கான "ஜெயந்தி ராதாகிருஷ்ணன் விருதினை" மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியது. மேலும், அந்நிறுவனத்தின் 10 புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க தொழில்முறை சாதனைகளுக்காகவும் சமூகத்திற்கான பங்களிப்புக்காகவும் "கோமதி ராதாகிருஷ்ணன் சிறப்பு முன்னாள் மாணவர் விருது 2025" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு “ஆகாஷ் பிரபாகர் சிறப்பு விளையாட்டு வீரர் விருது" நிறுவப்பட்டது. இது மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு பி.பி.ஏ. மாணவி செல்வி. ஷைனி கிளாட்சியாவுக்கு, மாநில மற்றும் தேசிய அளவிலான தடகள நிகழ்வுகளில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் 4,000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதிய பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றதோடு, அவர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை, சேவை மற்றும் சிறந்து விளங்குவதற்கான மதிப்புகளை நிலைநிறுத்துவதாக உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.






