‘குரூப்-4’ காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

குரூப்-4 தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர்.
சென்னை,
‘குரூப்- 4' காலிப்பணி இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அலுவலகத்தில், தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குரூப்-4 தேர்வர்கள் 15 பேர் நேற்று கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுதொடர்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர் ஆனந்தராஜ் என்பவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் ‘குரூப்-4' தேர்வு மூலம் சாதாரணமாக 9 ஆயிரம், 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், இந்த ஆண்டு இந்த தேர்வு மூலம் 4,662 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. சமூகநலத்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் வெவ்வேறு பதவி நிலைகளில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
குரூப்-4 தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர். தற்போது காலியிடங்கள் மிகவும் குறைவாக அறிவிக்கப்பட்டிருப்பதால் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தால் கூட பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காது. ‘கட்-ஆப்' மதிப்பெண்ணில் விளம்பு நிலையில் இருப்பவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக அரசு குரூப்-4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






