10-ம் வகுப்பு, பிளஸ்-1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


10-ம் வகுப்பு, பிளஸ்-1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
x

தேர்வுக் கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

10-ம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு மறுவாய்ப்பு உடனடியாக வழங்கும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

10-ம் வகுப்பு, பிளஸ்-1 மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜூலை 4 முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வருகை புரியாத தேர்வர்கள் 22-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் ஜூன் 4-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாக செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கட்டணத்தொகையுடன் ஜூன் 5, 6 ஆகிய 2 நாட்களில் பள்ளி சேவை மையங்களில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணம் 10-ம் வகுப்புக்கு ரூ.500 ஆகவும், பிளஸ்-1 வகுப்புக்கு ரூ.1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் இருந்து அரசு மற்றும் முழுமையான அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் துணைத் தேர்வுக்கான கால அட்டவணை அரசுத்தேர்வு சேவை மையங்களின் விவரங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story