645 பணியிடங்கள்: குரூப்2, 2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை,
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில் 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை வினாக்களாக கேட்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.தேர்வர்களின் நலன் கருதி, குரூப்-2ஏ பணிகளுக்கான தேர்வு திட்டம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாகவும், 2018 முதல் 2025 வரை 8 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதாவது 2024, 2025-ம் ஆண்டுகளில் குரூப்-2, 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தேர்வு மூலம் இந்த ஆண்டுக்கான அட்டவணையின்படி, தேர்வு அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டுவிட்டதாகவும், தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்வுக்கான அறிவிப்புகள் தவறாமல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.