அமெரிக்காவின் வரி விதிப்பால் கோவையில் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் - தொழில் முனைவோர் கருத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் ஜவுளித்துறையினர் கடும் நெருக்கடியிலும் குழப்பத்திலும் இருக்கின்றனர்.
கோவை,
அமெரிக்க அதிபர் டிரம்ப் 1-ந் தேதி (இன்று) முதல் இந்திய ஏற்றுமதிக்கு 25 சதவீதம் வரிவிதிப்பு செய்யப்படும் என அறிவித்திருப்பது, பல துறைகளை கடும் நெருக்கடிக்கு தள்ளி இருக்கிறது. அந்த வகையில் டிரம்ப் அறிவிப்பால் ஜவுளித்துறையினர் கடும் நெருக்கடியிலும் குழப்பத்திலும் இருக்கின்றனர்.
இந்திய ஜவுளித்துறையை பொறுத்தவரை, சர்வதேச சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு பஞ்சு கொள்முதல் செய்து, இந்திய ஜவுளி துறையினர் ஜவுளி பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் கிடைக்கும் பருத்தி போதாத நிலையில், 11 சதவீத இறக்குமதி வரியுடன், பருத்தி இறக்குமதி செய்து ஜவுளி பொருட்கள் தயாரிக்கின்றனர். இதனால் சர்வதேச நாடுகளுடன் கடுமையாக போட்டியிட்டு தொழிலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்பாராத விதத்தில் இந்தியாவுக்கான ஏற்றுமதி வரி 25 சதவீதம் அமெரிக்கா விதித்திருப்பது ஜவுளி துறையை கடும் நெருக்கடிக்கு தள்ளி இருக்கின்றன. ஒட்டுமொத்த வரி விகிதம் குறித்து கணிக்க முடியாமல் இருப்பதாக பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் ரவி சாம் தெரிவித்தார்.
இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவரான பிரபு தாமோதரன், கூறும்போது, வரிவிதிப்பு தொடர்பாக இந்தியாவிற்கு வந்து அமெரிக்க பிரதிநிதிகள் நடத்தும் விவாதத்துக்கு பின்னர், இதில் ஒரு தெளிவான முடிவு தெரியும் என தெரிவித்திருக்கின்றார். இந்த வரிவிதிப்பு கோவையில் ஜவுளி ஏற்றுமதியை பாதிக்கும் என்று ஜவுளி தொழில்முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.