இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை... சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்தது

கோப்புப்படம்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் குறைந்த தங்கம் விலை, கடந்த 6-ந் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது.
இதனையடுத்து விலை சரியத் தொடங்கியது. ஒரு சவரன் ரூ.72 ஆயிரம் என்ற நிலைக்கும் சென்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறது. இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதே வேகத்தில் தங்கம் விலை உயரும் பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சவரன் ரூ. 76 ஆயிரத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,535-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.