ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி


ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 15 Dec 2025 9:40 AM IST (Updated: 15 Dec 2025 11:07 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னை

தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக வட்டி விகிதம் குறைப்பதால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் திருப்புவார்கள். அப்படியாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89,440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.

அதிலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை ‘கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனையானது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.213-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story