இன்றைய தங்கம் விலை நிலவரம்


இன்றைய தங்கம் விலை நிலவரம்
x

கோப்புப்படம் 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சென்னை

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயரத் தொடங்கியது.

கடந்த 28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்த வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை அதிகரித்து, இதுவரையில் இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,510-க்கும், ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57,200-க்கு விற்பனையான நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.10,880 அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6.11 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த பரஸ்பரம் வரி இன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது தங்களுடைய கவனத்தை திருப்பி இருப்பதால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருவதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,510-க்கும், ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story