தங்கம் விலை குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் அவ்வப்போது குறைவதுமான நிலை இருக்கிறது. இதில் பெரும்பாலான நாட்களில் விலை ஏற்றத்தையே காண முடிகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சற்று வேகம் குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் எகிறி, மீண்டும் உயருவதற்கான அச்சாரத்தை போட்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.95-ம், பவுனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தங்கம் விலை ரூ.75 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்து, இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் என்ற இலக்கையும் எட்டி பிடித்து இருந்தது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.280-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு பவுன் ரூ.74,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.9,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.128-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் கணித்தபடி, இதே வேகத்தில் தங்கம் விலை பயணிக்குமானால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என்ற விலையில் விற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அமெரிக்கா எடுக்கும் சில முடிவுகள், பொருளாதாரம், பங்கு சந்தைகளில் பிரதிபலிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால், மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
24.07.2025 ஒரு சவரன் ரூ.74,040 (இன்று)
23.07.2025 ஒரு சவரன் ரூ.75,040 (நேற்று)
22.07.2025 ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 ஒரு சவரன் ரூ. 73,440
19.07.2025 ஒரு சவரன் ரூ. 73,360