ரூ.1 லட்சத்தை கடந்தது..! புதிய உச்சம் தொட்டு நகைபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தங்கம் விலை

இன்று பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னை,
தங்கம் விலை
கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89,440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.
கடந்த 12-ந்தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வரலாறு காணாத புதிய உச்சம்.!
இந்த நிலையில், ஏற்கெனவே கணித்தது போலவே தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவுசெய்துள்ளது. அதாவது, இன்று பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்தபோது இந்த புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் மீண்டும் சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், உக்ரைன் - ரஷியா போர், உலக நாடுகளின் மைய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாமானிய, நடுத்தர மக்கள் ”நம்மால் இனி தங்கத்தை வாங்க முடியாதோ?” என்று புலம்பும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.






