இந்தியாவில் விரைவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் டெஸ்லா: மும்பையில் முதல் ஷோரூம்

AI Image for representation
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களின் முதல் ஷோரூமை திறக்க உள்ளது.
மும்பை,
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் டெஸ்லா. உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்கிற்கு சொந்தமான இந்த நிறுவனம், உலகம் முழுவதும் மின் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2003-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக எலான் மஸ்க்கே இருக்கிறார். தற்போது சந்தையில் பல்வேறு மாடல் கார்களை டெஸ்லா விற்பனை செய்து வருகிறது. டெஸ்லாவின் தானியங்கி கார்கள், மின்சார கார்களுக்கு கார் சந்தைகளில் தனி மவுசு உள்ளது.
டெஸ்லா கார் நிறுவனம் இந்திய சந்தைகளிலும் கால் பதிக்க நீண்ட காலமாக முயற்சித்து வந்தது. எனினும், இங்குள்ள வரி பிரச்சினைகள் காரணமாக டெஸ்லா இந்திய சந்தைகளில் நுழைவது தாமதம் ஆனது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது.
அப்போதே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தடம் பதிப்பது உறுதியாகிவிட்டதாக பேசப்பட்டது. இந்த சூழலில்தான், டெஸ்லா நிறுவனம் தனது வரும் 15-ம் தேதியன்று இந்தியாவில் தங்கள் முதல் ஷோரூமைத் திறக்கவிருப்பதை உறுதி செய்துள்ளது. மும்பையின் குர்லா பகுதியில் ஆப்பிள் ஸ்டோர் அருகே 4 ஆயிரம் சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்ட்டுள்ளது.
நீண்ட காலமாகவே இந்தியாவில் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் நிறுவனமாக உள்ள டெஸ்லா, இந்தியாவில் விரைவில் தனது விற்பனையை தொடங்கலாம் எனத்தெரிகிறது. இது கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.