பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா..?


பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா..?
x

காலையில் பழங்களை சாப்பிட விரும்பினால் அதனுடன் நட்ஸ்கள், முழு தானியங்கள், முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து உட்கொள்ளலாம்.

சருமத்தை பளபளப்புடன் ஜொலிக்க வைக்கவும், உடல் எடை குறைந்து ‘ஸ்லிம்’மாக காட்சியளிக்கவும் சிலர் பழங்களை மட்டுமே உண்ணக்கூடிய ‘புரூட் டயட்’ முறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் அப்படி 3 வேளையும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்வது பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இந்த பழ உணவு முறையை முழுமையாக ஏன் பின்பற்றக்கூடாது? எந்த சமயத்தில் உட்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

தினமும் காலையில் மட்டும் ‘புரூட் டயட்’ பின்பற்றலாமா?

காலை உணவாக பழங்களை மட்டும் சாப்பிடுவது வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்கும். ஆனால் பொதுவாக இது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் பழங்களில் அத்தியாவசிய புரதம் மற்றும் கொழுப்புகள் இல்லாததால், விரைவில் பசி ஏற்பட வழிவகுக்கும். உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்காமல் போகலாம். எனவே காலையில் பழங்களை சாப்பிட விரும்பினால் அதனுடன் நட்ஸ்கள், முழு தானியங்கள், முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து உட்கொள்ளலாம்.

ஏன் பழங்களை மட்டுமே சாப்பிடக்கூடாது?

பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி, ஏ, ஈ, போலேட், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பி இருந்தாலும் அவற்றை மட்டுமே நம்பி இருப்பது வளர்ச்சிதை மாற்றம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, மன நலன் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஏனெனில் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு இந்த சத்துக்கள் மட்டுமே போதுமானது அல்ல. குறிப்பாக புரதம், வைட்டமின் பி12, கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா 3 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும்.

என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

உடல் தசைகள், திசுக்கள் செயல்பாட்டுக்கு புரதம் இன்றியமையாதது. நரம்புகள் மற்றும் ரத்த சிவப்பணுக்களுக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் தேவையானது. பழங்களில் இருந்து இவற்றை பெறமுடியாத நிலையில் உடல் பலவீனமடையும். சோர்வாக உணர வைக்கும்.

உடலில் புரதம், கொழுப்பு அளவு குறையும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாகும். அதன் காரணமாக உடல் ஆற்றல் குறைந்துவிடும். வேலை, படிப்பு, உடற்பயிற்சி என எந்த செயலையும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுத்து பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

பழங்களில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு நலம் சேர்ப்பவையாக இருந்தாலும், பழங்களை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இயற்கை சர்க்கரையின் அளவு அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்துவிடும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பிற உணவுகளுடன் பழங்கள் சாப்பிடலாமா?

மற்ற உணவுப்பழக்கங்களை பின்பற்றி வருவதுடன் பழங்களையும் அதிகம் சாப்பிடுவது நன்மை அளிக்கும். இதய நோய், பக்கவாதம், சில புற்றுநோய் அபாயங்களை குறைக்கும். மன அழுத்தத்தை போக்கும். பழங்களில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தரும். உடல் எடையை சீராக நிர்வகிக்க செய்யும். அதனால் பழங்களுடன் காய்கறிகள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பழங்கள் மட்டுமே உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதில்லை. கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் நச்சுக்களை நீக்குவதையே முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கின்றன.

உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா?

பழங்களை மட்டுமே சாப்பிடுவது பசி, பிற உணவுப்பொருட்களின் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட காரணமாகிவிடும். காலப்போக்கில் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும். ஒழுங்கற்ற உணவு பழக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.

குடல் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகுமா?

பழங்களில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவக்கூடியது. ஆனால் பழங்களை மட்டுமே உண்பது குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை சீர்குலைக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்துவிடும். வயிறு வீக்கம், மூளை ஆரோக்கியமும் பாதிப்படையும். பழங்களுடன் காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வதே குடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.

பழ உணவு முறை எவ்வாறு செயல்படுகிறது?

பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடும் இந்த உணவு பழக்கத்தில் நட்ஸ்கள் மற்றும் தானியங்களும் சில சமயங்களில் இடம் பெறுவதுண்டு. சிறந்த செரிமானம் நடைபெறுதல், இயற்கையாகவே உடலில் இருந்து நச்சுக்கள் நீக்கப்படுதல், விரைவாக உடல் எடை குறைதல் போன்ற காரணங்களுக்காக பலரும் பழ உணவு முறையை பின்பற்றுகிறார்கள். பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மிகுந்திருக்கும். அவை குடல் இயக்கத்திற்கு ஆதரவாக அமையும்.

1 More update

Next Story