வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வு அவசியம்.. இன்று உலக நீரிழிவு நோய் தினம்


வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வு அவசியம்.. இன்று உலக நீரிழிவு நோய் தினம்
x
தினத்தந்தி 14 Nov 2025 12:30 PM IST (Updated: 14 Nov 2025 3:31 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய தினம் நீரிழிவு நோய் தொடர்பாக பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள், சிகிச்சை முறைகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சினையாக நீரிழிவு நோய் உருவெடுத்துள்ளது. இந்நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இதயம், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, நிரந்தர பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான ஆபத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு நரம்புகளில் ஏற்படும் பாதிப்பின் விளைவாக கால்களில் புண்கள் ஏற்பட்டு ஆறாமல் கால்களை அகற்றவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை இன்னும் வேகப்படுத்துவது அவசியம். அதற்கான வாய்ப்பாக உலக நீரிழிவு நோய் தினம் (சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்) அமைந்துள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு நீரிழிவு நோய் தினம் இன்று (14.11.2025) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோய் என்பது குழந்தைப் பருவம், வாலிப பருவம், நடுத்தர வயது மற்றும் முதுமை என வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பாதிக்கக்கூடிய நோய் ஆகும். எனவே, இந்த ஆண்டின் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின கருப்பொருளாக “வாழ்க்கை நிலைகளில் நீரிழிவு நோய்” என வரையறுக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை, ஆதரவான சூழல்கள் கிடைப்பதுடன், ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகள் சென்று சேர வேண்டும் என்பதை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய தினம் நீரிழிவு நோய் தொடர்பாக பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் தங்களின் ஆலோசனைகளை மக்களுக்கு வழங்குகின்றனர். விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், உலக சுகாதார அமைப்பின் சார்பில் இன்று நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி (#AskWHO) நடத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் சமூக வலைத்தளங்களில் அதாவது WHO X, Facebook, LinkedIn மற்றும் YouTube சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம். குறிப்பாக, உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு, முறையான உடற்பயிற்சி, மன அமைதி, சரியான உடல் எடை இருப்பது அவசியம். வழக்கமான உடல் பரிசோதனையுடன், உரிய சிகிச்சையை தொடர்ந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை நீடிக்கும்.

1 More update

Next Story