இந்தியர்கள், தேநீருடன் பால் சேர்த்து குடிப்பது ஏன்?

பண்டிகை முதல் பலகாரம் வரை பால் தவிர்க்கமுடியாத பொருளாக விளங்குகிறது.
உலகின் பெரும்பாலான மக்கள் தேநீர் அருந்தும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். ஆனால் உலகளவில் தேநீருடன் பாலை விரும்பி சேர்த்து ருசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இதில் இந்தியர்கள் மட்டுமே விதிவிலக்கு. தேநீருடன் பாலை அதிகம் சேர்த்து ருசிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் இந்தியர்கள்தான்.
உலகளவில் பலரும் பாலை தவிர்க்கும் நிலையில் இந்தியர்கள் விரும்பி சேர்ப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய சமையலறைகளில் பால் தவிர்க்க முடியாத பானமாக இருக்கிறது. ஊட்டச்சத்து மிக்கதும், பாரம்பரியத்துடன் தொடர்புடையதும் அதற்கு முக்கிய காரணம்.
பண்டிகை முதல் பலகாரம் வரை பால் தவிர்க்கமுடியாத பொருளாக விளங்கியதால் தேநீருடன் எளிதில் இணைந்துவிட்டது. தேநீரில் இருக்கும் கசப்புத் தன்மையை குறைப்பதில் பால் முக்கிய பங்கு வகித்தது. ஊட்டச்சத்து கொண்ட பானமாகவும் மாற்றியது. குறிப்பாக இஞ்சி, ஏலக்காய், லவங்கப்பட்டை என மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு ஆரோக்கிய பானமாகவும் உருவெடுத்தது.
அத்தகைய மசாலா டீயை விரும்பி ருசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்துவிட்டது. வெளிநாடுகளை பொறுத்தவரை இங்கிலாந்தில் தேநீருடன் பால் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் தேநீர் பருகும் பீங்கான் கோப்பைகள் சூடு தாங்காமல் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கவும், தேயிலையில் இருக்கும் கசப்பு தன்மையை குறைக்கவும் பால் சேர்த்தார்கள். இந்தியாவை போல் பாகிஸ்தான், அயர்லாந்து, மலேசியா, ஹாங்காங் உள்பட கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பாலுடன் தேநீர் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது.






