அதிக ஊட்டச்சத்துகளைத் தரும் சமையல் முறை எது? அறிந்துகொள்வோம் வாங்க..!


அதிக ஊட்டச்சத்துகளைத் தரும் சமையல் முறை எது? அறிந்துகொள்வோம் வாங்க..!
x

நீராவியில் வேக வைத்தல், கொதிக்க வைத்தல் ஆகிய இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும்.

காய்கறிகளை நீராவியில் வேகவைப்பது, நீரில் கொதிக்கவிட்டு வேகவைப்பது இதில் எந்த முறையில் சமைப்பது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த இரு சமையல் முறையும் சுவை, நிறம், ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும். எந்த முறையில் சமைப்பது காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவிடும் என்பது குறித்து பார்ப்போம்.

காய்கறிகளை நீரில் வேகவைத்தல்

காய்கறிகளை நீரில் கொதிக்கவைத்து சமைப்பது எளிய மற்றும் வழக்கமான சமையல் முறையாகும். தண்ணீரில் காய்கறிகளை மூழ்கவைத்து 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வேகவைப்பது நல்லது. இந்த சமையல் முறை தொந்தரவு இல்லாதது. ஒரே சமயத்தில் வேறு சமையல் வேலைகளிலும் ஈடுபட ஏதுவானது. இருப்பினும் நீரில் கொதிக்க வைக்கும் செயல்முறையின்போது பல ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் இழக்கக்கூடும். அதனால் காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரிக்கலாம். குழம்பில் ஊற்றிவிடலாம். அப்படி செய்யும்போது மட்டுமே ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

நீரில் கொதிக்கவிட்டு வேகவைத்த காய்கறிகள் பெரும்பாலும் மென்மையாக மாறும். கொதிக்க வைக்கும்போது காய்கறிகளின் செல் சுவர்கள் உடைந்து அதன் இயற்கையான சுவை தன்மை வெளியேறக்கூடும். இருப்பினும் உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை நீரில் வேகவைப்பதே சரியானது. அவை ஜீரணிக்க எளிதாகவும் மாறும்.

ஊட்டச்சத்துகள்

இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும். அதே வேளையில், நீராவி முறை அதிக நன்மை தரும். இது செரிமானத்திற்கு உகந்த சேர்மங்களை அப்படியே தக்கவைத்துவிடும். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளை நீராவியில் சமைப்பதே சிறந்தது. அவற்றை தண்ணீரில் வேகவைப்பது சில ஊட்டச்சத்துக்களை குறைத்துவிடும்.

ஆயுர்வேதத்தில் நீராவியில் சமைக்கும் முறையே சிறந்ததாக மதிப்பிடப்படுகிறது. இது உணவில் இருக்கும் உயிர் சக்தியை பாதுகாக்க உதவுகிறது. உணவை இலகுவாகவும், புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் வைத்திருக்கும்.

முக்கிய வேறுபாடுகள்

ஊட்டச்சத்து தக்கவைப்பு: நீராவியில் வேகவைக்கும்போது மிக குறைவான வைட்டமின்களே இழக்கப்படுகின்றன. நீரில் கொதிக்க வைக்கும்போது வைட்டமின்கள் தண்ணீரில் கசிந்து விடும். அந்த தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.

அமைப்பு: நீராவியில் வேகவைப்பது, காய்கறிகளை உறுதியாகவும், மிருதுவாகவும், வண்ணமயமாகவும் தக்கவைத்துவிடும். அதே நேரத்தில் தண்ணீரில் கொதிக்க விடும்போது, ​​காய்கறிகள் மென்மையாக மாறும்.

சுவை: இயற்கையான மற்றும் இனிப்பு சுவைகளை தக்கவைக்க நீராவி சமையல் உதவும். கொதிக்க வைப்பது, காய்கறிகளை லேசானதாக மாற்றும்.

நேரம் - எளிமை: கொதிக்கவைக்கும் முறையுடன் ஒப்பிடும்போது நீராவியில் சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.

கொதிக்கும் நீரில் இருந்து வெளிப்படும் நீராவி மூலம் காய்கறிகளை சமைக்கும்போது தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாமல் வேகும். அந்த நீராவி காய்கறிகளின் எல்லா பகுதியிலும் சமமாக பரவி நன்றாக வேக தொடங்கும். காய்கறிகளை மென்மைத்தன்மைக்கு மாற்றுவதோடு சுவையும் குறையாமல் பார்த்துக்கொள்ளும். தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாததால் காய்கறிகளில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படும். குறிப்பாக நீரில் கரையும் வைட்டமின்களான பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்றவை தக்கவைக்கப்படும். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம். உதாரணமாக கேரட் நிறம் பளிச்சென்று மாறும். புரோக்கோலி மொறுமொறுப்பு தன்மையை தக்கவைத்துக்கொள்ளும். மேலும் நீராவியில் வேகவைப்பது காய்கறிகளின் இயற்கையான இனிப்புத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவிடும். நீராவியில் வேகவைக்கும்போது தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது கலோரிகளை கூடுதலாக்காமல் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த துணைபுரியும்.

1 More update

Next Story