டென்னிஸ் எல்போ நோய்க்கு சித்த மருத்துவம்

டென்னிஸ் எல்போ நோய் பெரும்பாலும் அதிகப்படியான கைகளின் பயன்பாடு மற்றும் தசை அழுத்தத்துடன் தொடர்புடையது.
டென்னிஸ் எல்போ" அல்லது "லேட்டிரல் எபிகாண்டிலைடிஸ்"என்பது முழங்கைகளில் ஏற்படுகின்ற ஒரு வாதம் ஆகும். இது முழங்கையில் உள்ள தசைகள் மற்றும் தசைநாண்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. டென்னிஸ் எல்போ பெரும்பாலும் மணிக்கட்டு மற்றும் கையின் தொடர்ச்சியான இயக்கங்களுடன் தொடர்புடையது.
இதன் பெயர் டென்னிஸ் எல்போ என இருந்தாலும் டென்னிஸ் விளையாடாமல் கைகளால் தொடர் வேலைசெய்யும் பிளம்பர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், தச்சர்கள், இறைச்சிக் கடைக்காரர்கள், டிரைவிங் செய்பவர்கள், சமையல் செய்பவர்கள், கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கும் இந்நோய் வருகிறது.
டென்னிஸ் எல்போ நோய் பெரும்பாலும் அதிகப்படியான கைகளின் பயன்பாடு மற்றும் தசை அழுத்தத்துடன் தொடர்புடையது. முன்கை தசைகளை தொடர்ச்சியாக இயக்குவது அறிகுறிகளைத் தூண்டுகிறது.
டென்னிஸ் எல்போ குறிகுணங்கள்:-
முழங்கைகளில் வலி, கைகளால் வேலை செய்தால் வலி அதிகரித்தல், நடுக்கம், விறைப்பாக இருத்தல், முழங்கைகளில் வீக்கம், கைகளில் பலகீனம் காணப்படும்.
நோயைக் கண்டறிய எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.
சித்த மருத்துவம்:
1. பறங்கி ரசாயனம் -500 மிகி இருவேளை சாப்பிடலாம்.
2. அமுக்கரா சூரணம் -1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மிகி, அயவீரச் செந்தூரம் -200 மிகி, முத்துச் சிப்பி பற்பம் -200 மிகி இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
3. வலியுள்ள முழங்கையில் உளுந்து தைலம் தேய்க்க வேண்டும்.
4. கை தசைகளை வலுப்படுத்தும் புரத உணவுகளை சாப்பிடவேண்டும். பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.