பெண்களை பாடாய்ப் படுத்தும் வெள்ளைப்படுதல்: கை கொடுக்கும் சித்த மருத்துவம்

கீழாநெல்லி சூரணம் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடித்துவர, வெள்ளைப்படுதல் விரைவில் சரியாகும்.
பெண்கள் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சினைகளில் வெள்ளைப்படுதலும் ஒன்று. சிலருக்கு வெள்ளைப்படுதல் நாளாக நாளாக அதிகரிக்கும். இதனால் அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்துவிடுவார்கள். இதற்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான தீர்வுகள் உள்ளன.
இயல்பாக எல்லா மகளிருக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஆகாமல் இருக்க, இயற்கையாகவே சிறிதளவு வெண்மை நிறக்கசிவு வெளிப்படும். இக்கசிவினால் மகளிர்க்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஆனால், கசிவின் அளவு அதிகரித்தும், நிறம் மாறியும், நாற்றதுடனும் காணப்படுதல், பிறப்புறுப்பில் ஊறல், முதுகுவலி போன்ற குறிகுணங்களுடன் சேர்ந்து காணப்பட்டால், அது பெண் பிறப்புறுப்பு நோய்நிலைகளை காட்டுவதாகும்.
உடலுறவுக்கு முன்பும், உடலுறவின் போதும், சினைமுட்டை வெளிப்படும் காலங்களிலும் வெண்கசிவு சற்று அதிகமாக காணப்படுவது இயல்பான ஒன்று. மகளிர்க்கு காணப்படும் யோனிக்கசிவு அமிலத்தன்மையுடன் காணப்படுவதால் தொற்றுகள் ஏற்படாதவாறு தடுக்கப்படுகிறது.
வெண்கசிவு அதிகரித்தலுக்கான பிற காரணங்கள்:
கருப்பை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic inflammatory diseases), சுகாதாரமற்ற கழிவறைகளை உபயோகித்தல், உடலுறவின் மூலம் பரவும் நோய்களால் (Sexually transmitted diseases - syphilis and gonorrhoea), பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா தொற்று (Bacterial vaginosis), பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுகள் (Yeast infection - Candidiasis, Trichomonas vaginalis), கருப்பை கழுந்து தாபிதம் (Cervicitis), கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களால் (Copper -T), கருப்பை கழுத்து புற்றுநோய் (Cervical cancer), Vaginal atrophy, vaginal fistula, vaginal cancer போன்று பல காரணங்களால் வெண்கசிவு அதிகரித்து, நிறம் மாறி, நாற்றத்துடன் காணப்படும்.
வெள்ளைப்படுதலுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:
* வெண்பூசணி லேகியம் - 5கிராம் அளவு காலை, மாலை என இருவேளை உண்ண வேண்டும்.
* ஏலாதி சூரணம் 2 கிராம், சிலாசத்துப்பற்பம் 200 மில்லி கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கிராம் அளவு காலை, மாலை இருவேளை உணவுக்கு பின்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* தண்ணீர்விட்டான் நெய் 5 மி.லி வீதம் காலை, மாலை இருவேளை எடுத்துக் கொள்ளவும்.
* கீழாநெல்லி செடியின் வேரை நீக்கிவிட்டு மற்ற பாகங்களை தண்ணீரில் அலசி, தயிர் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும்.
* கீழாநெல்லி சூரணம் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.
* திரிபலா சூரணம் 2கிராம் அளவு வெந்நீரில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.
* இரவு உறங்கும் முன்னர் திரிபலா சூரணம் 5 கிராம் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் போட்டு, கலக்கி, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இவ்வாறு செய்வதால் ஊறல், அரிப்பு போன்றவை குணமாகும். வெள்ளைப் படுதலும் குறையும்.
* ஆவாரம்பட்டை, ஆவாரம் பூ, ஆவாரம் இலை போன்றவற்றை 10 கிராம் எடுத்து 250 மி.லி தண்ணீர் சேர்த்து 60 மில்லியாக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 30 மில்லி வீதம் அருந்தி வரவும்.
* செம்பருத்தி பூவை அதிகாலை தோறும் உண்டு வர சூடு நீங்கி, வெள்ளைப்படுதல் குறையும்.
* வெண்பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து குடிக்கவும்.
* பாலுடன், சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.
* உடல் சூட்டைத் தணிக்க கூடிய மோர், இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அசோக பட்டை 5 கிராம் எடுத்து அதில் 100 மி.லி தண்ணீர் சேர்த்து 60 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி அதை வேளைக்கு 30 மில்லி வீதம் அருந்தி வரவும்.
* சிறுஅம்மான் பச்சரிசி இலையை அரைத்து எலுமிச்சங்காயளவு மோரில் கலக்கி, மூன்று நாள் குடிக்க வெள்ளைப்படுதல் நீங்கும்.
* ஓரிதழ் தாமரை இலையை மென்று சாப்பிட்டு பால் குடித்து வரவும்.
* தாமரைப் பூவின் இதழ்கள் சிறிதளவு, பசு வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து அரைத்து, ஏழு நாட்கள் காலையில் ஒரு உருண்டை வீதம் உண்ண உடல் சூடு, வெள்ளை தீரும்.
* வெள்ளாட்டுப்பாலில் எலுமிச்சங்காய் அளவு கட்டுக் கொடியின் வேரை அரைத்து கலக்கி மூன்று நாள் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
* இலவம் பிசின் 10 - கிராம், நீர்முள்ளி விதை - 10 கிராம் இரண்டையும் இடித்து பொடி செய்து 1-2 கிராம் பொடியை வெண்ணையில் சேர்த்து உண்ண வெள்ளை தீரும்.