நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனத்தை சரிசெய்யும் சித்த மருந்துகள்

நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க நெல்லிக்காய் லேகியம் ஒன்று முதல் இரண்டு கிராம் வீதம் காலை, இரவு இரண்டு வேளை சாப்பிடலாம்.
சிலருக்கு கால் பாதம், உடம்பு முழுவதும் ஒருவித காந்தல் இருக்கும். அத்துடன் நரம்புகளும், உடம்பும் பலவீனமாக இருக்கும். நரம்பு பாதிப்பினால் இதுபோன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பெரிபெரல் நியூரோபதி அல்லது நரம்புத் தளர்ச்சி என்பது நரம்புகளின் உணர்ச்சிக் குறைவு ஆகும். இது மூளை மற்றும் முதுகுத் தண்டுக்கு வெளியே அமைந்துள்ள புற நரம்புகள் சேதமடைவதால் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களில் பலவீனம், உணர்வின்மை, ஒரு வித எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. இது செரிமானம் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட பிற உடல் செயல்பாடுகளையும் பாதிக்கலாம்.
காரணங்கள்
பெரிபெரல் நியூரோபதி அல்லது புற நரம்புகள் சேதமடைதல் என்பது பொதுவாக காயங்கள், வளர்சிதை மாற்ற சிக்கல்கள், பரம்பரை காரணங்கள், நீரிழிவு நோய் போன்றவற்றால் ஏற்படுகின்றது. வைட்டமின்கள் பி-1, பி-6 மற்றும் பி-12, ஈ உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, தாமிரம் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.
உணவுப் பழக்கவழக்கங்கள்
நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பேரீச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், உலர்திராட்சை, செர்ரி, ஆப்பிள் சாப்பிடலாம். அவரை, பீன்ஸ், வாழைக்காய், பிரக்கோலி, முட்டைக்கோஸ், காலிபிளவர், கொத்தவரங்காய், கோவைக்காய், பாகற்காய் சாப்பிடலாம். முழு தானியங்கள், சோயா, பாதாம், ஓட்ஸ், வால்நட், பிஸ்தா மற்றும் மெலிந்த புரதம் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். இறைச்சி, மீன், முட்டை, சிப்பி, பால் உணவுகள், வெண்ணெய், நெய், தயிர், ஈஸ்ட், காளான்கள், கடற்பாசிகள் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சத்துகளை அதிகரிக்கலாம்.
குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தத்தமது உடல் வன்மைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது. தினம் இரவு 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.
போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சித்த மருத்துவம்
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி. வீதம் காலை மற்றும் இரவில் தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
2) திரிபலா சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு வேளையில் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
3) நெல்லிக்காய் லேகியம் ஒன்று முதல் இரண்டு கிராம் வீதம் காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.
4) கை, கால், உடம்பு, நரம்பு பலவீனம் உள்ள இடங்களில் விடமுட்டி தைலத்தை பூசி வரலாம்.