மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு.. சித்த மருத்துவ தீர்வுகள்


மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு.. சித்த மருத்துவ தீர்வுகள்
x
தினத்தந்தி 15 Feb 2025 6:00 AM IST (Updated: 15 Feb 2025 6:06 AM IST)
t-max-icont-min-icon

ஹார்மோன் பிரச்சினைகள், கருப்பை பிரச்சனைகள் உள்ளிட்ட பல காரணங்களால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.

மாதவிடாய் காலங்களில் அதிகரித்த ரத்தப்போக்கு மெனோரேஜியா என்றழைக்கப்படுகிறது. மாதவிடாய் காலம் என்பது சாதாரணமாக மூன்று முதல் ஏழு நாட்கள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். இது நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் காலம் 7 நாட்களுக்கு மிகுதிப்பட்டும், ரத்தப்போக்கு அதிகரித்தும் காணப்படும் நிலையே, அதிகரித்த ரத்தப்போக்கு அல்லது பெரும்பாடு (மெனோரேஜியா) எனக் கூறப்படுகிறது.

காரணங்கள்:

1. கருப்பை சளிக்கவசம் கருப்பை உள்ளுறுப்புகளில் வளருதல் கருப்பை தசையான மயோமெட்ரியத்தில் எண்டோமெட்ரியம் வளருதல்

2. கருப்பையில் வளரும் சாதாரண தசைக் கட்டிகள் சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் சாக்கலேட் கட்டிகள்

3. கருப்பை தசை கடினமடைதல்

4. பெண்மைக்குரிய ஹார்மோன்களான புரஜஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் இவைகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள் .

5 கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களான காப்பர் டி போன்றவை குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது.

இதுபோன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது. இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப்போக்கு ஒரு குறிகுணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்வுகள்:

1. திரிபலா சூரணம் 1 கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கிராம், படிகார பற்பம்-100 மிகி அளவு காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.

2. கொம்பரக்கு சூரணம் 1 கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்.

3. திரிபலா சூரணம் 1 கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம்-200 மிகி அளவு எடுத்து தேனில் காலை, மாலை இருவேளை ஏழு நாட்கள் உண்ணவும்.

4. வாழைப்பூ வடகம்-1-2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

5. பூங்காவி செந்தூரம்-200 மிகி காலை இரவு இருவேளை சாப்பிடலாம்.

6. இம்பூறல் மாத்திரை -1-2 காலை, இரவு இருவேளை சாப்பிடலாம்.

7. உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை சாதம், முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் சேர்த்து கொள்ளலாம்.

8. என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை அறிய மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.


Next Story