நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும் கிராமிய பழக்கங்கள்

கிராமப்புறங்களில் பனி மூடிய புல்லில் வெறுங்காலுடன் நடப்பது வயல் வேலைகளுக்கு செல்பவர்களின் அன்றாட வழக்கமாகும்.
நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய பழக்கவழக்கங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வழிவகை செய்தன. அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் பின்பற்றும் வழக்கம் கிராமப்புறங்களில் ஆங்காங்கே நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் எளிதாக பின்பற்றும் வகையிலேயே அவை அமைந்திருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.
சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருத்தல்
பெரும்பாலான கிராமவாசிகள் அதிகாலை 4.30 மணி முதல் 5 மணிக்குள் எழும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இந்த அமைதியான நேரம் மனத்தெளிவை அதிகரிக்கும். இயற்கை சூழலுடன் ஒருங்கிணையவைத்து ஒட்டுமொத்த உயிர்சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது.
புல்லில் வெறுங்காலுடன் நடத்தல்
பனி மூடிய புல்லில் வெறுங்காலுடன் நடப்பது வயல் வேலைகளுக்கு செல்லும் ஆண்கள், பெண்களின் அன்றாட வழக்கமாகும். இந்த நடைப்பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கும். உடலுக்குள் ரத்த ஓட்ட சுழற்சியை மேம்படுத்தும். பூமியின் தரைத்தளத்துடன் கால்கள் மூலம் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் உடல் ஆற்றலை சமநிலைப்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பூங்காக்கள், புல்வெளிகள் சூழ்ந்த இடங்களில் நடக்கலாம்.
வெதுவெதுப்பான நீர் குடித்தல்
காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அல்லது செம்பு பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீரை பருகுவது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற வழி வகை செய்யும். செரிமானத்தை துரிதப்படுத்தும். இயற்கையாகவே வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை தூண்டிவிடும்.
சுவாச பயிற்சி
விடியற்காலையில் எளிய சுவாசப்பயிற்சிகளை செய்வது நுரையீரல், ஆக்சிஜன் செயல் திறனையும் கவனிக்கும் திறனையும் மேம்படுத்தும். புதிய, மாசுபடாத, புத்துணர்ச்சியூட்டும் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
பிரார்த்தனை
பிரார்த்தனையுடன் அன்றைய நாளைத் தொடங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கவும், அமைதியான மனநிலையை தக்கவைக்கவும், உணர்ச்சி ரீதியாக சிறப்பாக செயல்படவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் உதவிடும்.
குறைவாக உணவு சாப்பிடுதல்
காலை உணவை குறைவாக சாப்பிடும் வழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். அந்த உணவு ஊட்டச்சத்துமிக்கதாகவும் இருக்க வேண்டும். உடலில் அதிக சுமை இல்லாமல் நீடித்த ஆற்றலை அளிக்க வித்திடும்.
சூரிய ஒளியில் உலவுதல்
சூரிய உதயத்தின்போது திறந்த வெளியில் நேரத்தை செலவிடுவது உடலுக்கு தேவையான இயற்கையான வைட்டமின் டி கிடைக்கச் செய்துவிடும். தூக்க சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும். மனநிலையை மேம்படுத்தும். அதனால் காலையில் எழுந்ததும் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவது சிறப்பானது.
சூரிய நமஸ்காரம்
தினமும் காலையில் சில நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்வது உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். உடல் வலிமையை அதிகரிக்கச்செய்யும். மனதை ஒருநிலைப்படுத்தும். ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். முழுமையான ஆரோக்கியத்திற்கான முக்கிய அங்கமாகவும் விளங்கும்.
உடற்பயிற்சி சார்ந்த வேலை
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் முற்றங்களை சுத்தம் செய்தல், கால்நடைகளை பராமரித்தல், விவசாய வேலைகளில் ஈடுபடுதல் போன்ற உடற்பயிற்சிகளை போலவே உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய அன்றாட செயல்பாடுகளே உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.






