பத்திரிகை, புத்தகம் வாசித்தால் மனஅழுத்தம் குறையும்!

வாசிப்பு பழக்கத்தால் ஞாபக சக்தியும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கவனம் கூர்மையாகும். நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும்.
ஆன்டிராய்டு செல்போன் வருகைக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் பத்திரிகை, புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இவ்வாறு வாசிப்பு பழக்கம் குறைவதால் உடல் நலனில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மூளை பாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. எனவே, பத்திரிகை, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வாசிப்பு பழக்கத்தால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் நன்மைகள் வருமாறு:-
பத்திரிகை, புத்தகம் வாசிக்கும்போது, மூளையின் பின் பகுதி நரம்புகள் தூண்டப்படும். இந்தப் பகுதியில் தான் நினைவுகளின் தொகுப்புகள் இருக்கும். எனவே, வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்போது, நிறைய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வாய்ப்பு ஏற்படும். இதனால் மூளையின் பின் பகுதி நரம்புகள் அதிகமாகத் தூண்டப்படும். கூடுதல் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும்.
மேலும், ஞாபக சக்தியும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கவனம் கூர்மையாகும். நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும். வாசிப்புப் பழக்கம் தான் மூளைக்கான பயிற்சியாக அமையும். வாசிப்பதால் மன அழுத்தம் குறையும். மிகச்சிறந்த ஒரு புத்தகத்தால், ஒருவரின் கவனச் சிதறல் பிரச்சினையை சரி செய்ய முடியும். தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.
குறுகிய எண்ணங்கள் மற்றும் தவறான சிந்தனையில் இருந்து ஒருவரால் விடுபட முடியும். முதியவர்கள் வாசிப்பைப் பழக்கப்படுத்திக் கொண்டால், மூளை தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
அதுபோல, இளம் வயதில் வாசிப்பு அதிகமாக இருந்தால், வயதான பிறகு ஞாபக மறதி தொடர்பான பிரச்சினைகள் 32 சதவீதம் தடுக்கப்படும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இப்படி, வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இனி பத்திரிகை, புத்தகம் வாசிப்புக்கும் சுவாசம்போல் முக்கியத்துவம் அளிப்போம்.






