குளிர்காலத்தில் காது வலி வராமல் தடுக்கும் வழிமுறைகள்

குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
டிசம்பர் மாதத்தில்தான் பொதுவாக குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்ந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்த காலகட்டங்களில் பாதுகாப்பாக இருப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரித்து பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை சமாளிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.
குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தை விட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இந்த வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப்போய்விடுகிறது. இது ‘பெல்ஸ் பாலஸி’ என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம். அது குளிர் காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் ‘ஸ்கார்ப்’ அணிந்து கொள்ளலாம்.
குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். அதன் பிறகும் காது வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
மூக்கையும், காதையும் இணைக்கும் ஒரு குழாய்தான் குளிர்காலத்தில் ஏற்படும் காது வலிக்கு முக்கிய காரணம். யூஸ்டேஷியன் குழாய் என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர்காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக்குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இறுக்கமாகி காது வலி உண்டாகிறது.






