‘மந்திர அரிசி கோமல் சால்’: சமைக்கவேண்டாம்.. ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம்..!

கோமல் சால் அரிசியானது உணவு தயாரிக்க சுலபமானது மட்டுமின்றி பசி உணர்வை போக்கி நிறைவாக சாப்பிட்ட உணர்வையும் தரக்கூடியது.
அரிசியை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் சமைக்காமல் சாப்பிடக்கூடிய அரிசி அசாமில் விளைவிக்கப்படுகிறது. அதன் பெயர் ‘கோமல் சால்’. மந்திர அரிசி என அழைக்கப்படும் இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறி சாப்பிட தயாராகிவிடும்.
போரா சால் என்ற பாரம்பரிய அரிசியை கைமுறையாக பதப்படுத்தி கோமல் சால் அரிசி தயாரிக்கப்படுகிறது. போரா சால் அரிசியை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து நாள் முழுவதும் வெயிலில் உலர்த்தினால் கோமல் சால் அரிசி தயாராகிவிடும்.
கோமல் சால் அரிசி வழக்கமான அரிசியை போல் இல்லாமல் தனித்துவமான ஸ்டார்ச் அமைப்பை கொண்டுள்ளது. அது ஊற வைக்கும்போது மென்மையாக மாற வழிவகை செய்கிறது. அப்படி மாறிய சாதத்துடன் வெல்லம், தயிர், பால் அல்லது வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
பண்டைய காலத்தில் வயல் வேலைக்கு செல்லும் விவசாயிகள், நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் இந்த அரிசியை உடன் எடுத்து சென்றார்கள். சமைக்க வேண்டிய அவசியமில்லாமல் தண்ணீரில் ஊற வைத்தால் போதும். உடனே சாப்பிட்டு விடலாம் என்பதால் இந்த அரிசிக்கு அந்த காலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது. எடுத்து செல்வதற்கும் எளிதானது, உணவு தயாரிக்க சுலபமானது மட்டுமின்றி பசி உணர்வை போக்கி நிறைவாக சாப்பிட்ட உணர்வையும் தரக்கூடியது. திருவிழாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்வுகளில் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டது.
இந்த அரிசியின் ஊட்டச்சத்து மதிப்புக்கும் குறைவில்லை. இதிலிருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கக்கூடியது. அதேவேளையில் மெதுவாக வெளியிடும் ஸ்டார்ச்சை கொண்டிருப்பதால் சோம்பலாக உணர வைக்காமல் உற்சாக நிலையை தக்கவைக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத்தை ஊக்குவிக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவிடும். பிரீரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். உடலுக்கு தேவையான இரும்பு சத்தையும் அளிக்கும். உணவில் இருந்து அத்தியாவசிய தாதுப்பொருளை போதுமான அளவு பெற முயற்சிப்பவர்களுக்கு இந்த அரிசி சிறந்த தேர்வாக அமையும். பால் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புரதம், கால்சியம் கொண்ட சமச்சீர் உணவாக மாறும். வெல்லம், வாழைப்பழம் சேர்ப்பதன் மூலம் இரும்புச்சத்து, நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும்.
அசாமின் பாரம்பரிய அரிசியாக இருந்த கோமல் சால் அரிசியின் பயன்பாடு காலப்போக்கில் குறைந்து போனது. தற்போது மீண்டும் இந்த அரிசிக்கு மவுசு கூடியுள்ளது. அசாம் மாநிலத்தை கடந்து மற்ற பகுதியில் வசிப்பவர்கள் மத்தியிலும் இந்த அரிசிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் தளங்களிலும் இந்த மந்திர அரிசி விற்பனை செய்யப்படுகிறது.






