குறைந்த செலவில் நிறைந்த பயன்: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் சீரகம், கொத்தமல்லி தண்ணீர்


குறைந்த செலவில் நிறைந்த பயன்:  ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் சீரகம், கொத்தமல்லி தண்ணீர்
x
தினத்தந்தி 17 Aug 2025 1:07 PM IST (Updated: 17 Aug 2025 5:17 PM IST)
t-max-icont-min-icon

கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் விரும்புபவர்கள் சீரக தண்ணீர் பருகலாம்.

உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை பேணும் விஷயத்திலும் காலை வேளையில் பின்பற்றும் உணவுப்பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும், சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தவும் அவை காரணமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் காலையில் பருகும் பானமும் முக்கியமானது. சீரக தண்ணீர், தனியா எனப்படும் கொத்தமல்லி தண்ணீர் இதில் எதை பருகுவது சிறந்தது என்று பார்ப்போம்.

சீரக தண்ணீரின் நன்மைகள்

ஒரு லிட்டர் சீரக தண்ணீரில் 7 கலோரிகளே உள்ளன. அதனால் கலோரி உட்கொள்ளலை குறைக்க சிறந்த வழிமுறையை நாடுபவர்களுக்கு ஏற்ற பானமாக விளங்குகிறது. உடல் எடையை நிர்வகிப்பதற்கும் வழிவகை செய்கிறது.செரிமான நொதிகளை தூண்டி செரிமானம் எளிதாக நடைபெறவும், மலச்சிக்கலை போக்கவும் துணைபுரிகிறது. சீரகத்தில் உள்ளடங்கி இருக்கும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் வயிறு வீக்கத்தை குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் சீரகத்தில் இருக்கும் பயோபிளவனாய்டுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும், கொழுப்பை திறம்பட எரிக்கவும், உடல் ஆற்றலை ஊக்கப்படுத்தவும் உதவுகின்றன.

சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது. சர்க்கரை அதிகரிப்பதை தடுத்து நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் செய்யும். கணைய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.எது சிறந்தது?

சீரக தண்ணீர், தனியா தண்ணீர் இதில் எதை தேர்வு செய்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. ஏனெனில் இரண்டுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. அதிக கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் விரும்புபவர்கள் சீரக தண்ணீர் பருகலாம். திரவ மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்களுக்கு தனியா தண்ணீர் பொருத்தமானது.

தனியா தண்ணீரின் நன்மைகள்

தனியா நீரில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்றவை நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிடம் இருந்தும் பாதுகாக்கின்றன.

நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை ஒழுங்குபடுத்துகின்றன. பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் பிரச்சினைகளை சுமூகமாக எதிர்கொள்ள உதவிடும். தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும். தனியாவில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் நச்சுகளை வெளியேற்றும். சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தும்.

தனியா நீர் சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவதை கட்டுப்படுத்தும். வயிறு வீக்கத்தையும் குறைக்கும். ரத்த ஓட்டத்தையும், சரும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவிடும்.

தயாரிப்பது எப்படி?

சீரக நீர் தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அதனை வடிகட்டி பருகலாம்.

தனியா தண்ணீர் தயாரிப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் தனியாவை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அதனை வடிகட்டி குடிக்கலாம்.

1 More update

Next Story