மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி..?


மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி..?
x

உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிக்கப்படும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பொதுவாக சொல்வதுண்டு. அது உடல் நோய் மற்றும் மன நோய் இரண்டையும் உள்ளடக்கியது. உடல் அளவில் எந்த விதமான நோயும் இல்லை என்பது மட்டுமே ஆரோக்கியம் என்று குறிப்பிட இயலாது. ஒருவர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றுடன் சமூக இணக்கம் ஆகியவற்றையும் ஒருசேர பெற்றிருந்தால் மட்டுமே அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று அர்த்தம். ஒருவர் எந்தவித உடல் சம்பந்தமான நோய் இல்லாமல் வாழ்ந்தாலும், மனதில் மகிழ்ச்சியோ அல்லது சமூகத்தோடு இணக்கமாக வாழ இயலாத நிலையிலோ இருந்தால் அவர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறார் என்று குறிப்பிட இயலாது.

உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிக்கப்படும். அதனால் உடல் நலம் மட்டுமல்லாமல் மனநலம் குறித்தும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காய்ச்சல், உடல் வலி, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்று உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது போல மனதுக்கும் பல்வேறு தீங்குகள் தினமும் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன. மற்றவர் பேசும் பேச்சுகள், உறவினர்கள் மனஸ்தாபம், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் பிரச்சினை, தொழில் அல்லது பணியிட சிக்கல் ஆகியவற்றால் மனரீதியான பிரச்சினைகள் அனைவருக்கும் ஏற்பட்டு கொண்டு தான் உள்ளன. உடலுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக அது வெளியில் தெரிவது போல மனதிற்கு ஒரு பிரச்சினை என்றால் அதை சுலபமாக கண்டுபிடிக்க முடிவதில்லை.

வீட்டில் உள்ள ஒருவருக்கு காய்ச்சல் அல்லது உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அவரே மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இரண்டு மூன்று நாட்கள் ரெஸ்ட் எடுத்தால் சரியாக ஆகிவிடும் என்று அவருக்கு அறிவுரைகள் அளிப்பார்கள்.

மனமோ அதனுடைய இயல்பான தன்மையோ பாதிக்கப்பட்டால் ஒருவர் சரியான, நல்ல முடிவுகளை எடுப்பது இயலாது. தன்னுடைய வழக்கமான பணிகளையும் திறம்பட செய்து முடிக்க இயலாது. மனதில் இயல்பான நிலையை அடிப்படையாகக் கொண்டுதான் அன்றாட வாழ்க்கையில் எந்தவித குழப்பமும் இல்லாமல் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும். ஏதேனும் ஒரு வகையில் மன சமநிலை அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிகரெட், மது உள்ளிட்ட போதை பழக்கங்களை நாடுகிறார்கள். அப்படிப்பட்ட பழக்கங்கள் மூலம் தற்காலிக நிம்மதியை அவர்கள் பெற்றாலும், உடல் மற்றும் மன ரீதியான நீண்ட கால பாதிப்புகளுக்கு அவர் ஆளாகி விடுகிறார் என்பதுதான் உண்மை.

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என்ற வினாவிற்கு மனநல மருத்துவர்கள் பல்வேறு எளிய வழிகளை பரிந்துரை செய்துள்ளார்கள். அது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

* உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பது அவசியம். அத்துடன் காலை உணவை தவிர்ப்பது கூடாது. நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம்.

* உறக்கம் என்பது குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை இருப்பது மிகவும் நல்லது. ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக உறங்கும் பொழுது மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.

* படுக்கை அறையில் பிரகாசமான கண்கூச வைக்கும் விளக்குகள் ஒளிர்வது கூடாது. மென்மையான ஒளிதரும் விளக்குகளை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் உறக்கத்திற்கு ஏற்ற மெலடோனின் சுரப்பு கூடுதலாகி உடனடியாக தூக்கம் வரும்.

* நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எல்லா விஷயங்களுக்கும் போட்டிபோடும் மனப்பான்மையை தவிர்ப்பது நல்லது. விவாதங்களில் விட்டுக் கொடுப்பவராக இருப்பது நல்லது.

* ஒவ்வொருவரும் தனிப்பட்ட திறமைகளோடு பிறந்து வளர்ந்து இருப்பார்கள். அதேபோல அவரவருக்கு உள்ள தனித்திறமைகளை பயன்படுத்தி படிப்பு, விளையாட்டு, கலை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு தங்களுடைய தொடர்பு எல்லைகளை அதிகரித்துக் கொண்டால் மனதிற்கு அது உறுதி தரும் செயலாக அமையும்.

* அன்றாட வேலைகளாக இருந்தாலும் எந்திரத்தனமான பணிகளையே தினமும் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் மூளை மற்றும் மனம் ஆகியவை சோர்வடைந்து விடும். ஆகவே குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியான பணிகளுக்கு இடையில் விடுப்பு எடுத்து அருகில் உள்ள ஊருக்காவது சுற்றுலா செல்வது மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

1 More update

Next Story