மனித உடலின் கடினமான பகுதி!

பற்களில் படியும் பாக்டீரியாக்களை நீக்குவதன் மூலம் பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களைத் தடுக்கலாம்.
மனித உடல் என்பது பல உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களால் ஆனது. இந்த உறுப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு முழுமையான அமைப்பாக செயல்படுகின்றன. உடல் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலமும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு உதவுகிறது.
எடுத்துக்காட்டாக, செரிமான மண்டலம் உணவை ஜீரணிக்க உதவுகிறது. உடலில் உள்ள உறுப்புகள் தனித்தனியே சில சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன. அந்த வகையில் உடலின் கடினமான பகுதி எது தெரியுமா?
எலும்புகள்தான் என்று பலர் நினைப்பது உண்டு. ஆனால் இந்த கேள்விக்கான பதில் ‘எனாமல்’. இது பற்களின் வெளிப்புற அடுக்காகும். நமது பற்கள் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்களால் ஆனது. எனாமலில் 96 சதவீதம் தாதுக்கள் உள்ளன. இவை எனாமலை மிகவும் கடினமாக்குகின்றன. பல் எனாமல் உடலின் கடினமான பகுதியாக இருந்தாலும் சேதமடையக்கூடியது. இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது, பாக்டீரியாக்கள் எனாமலை அரித்து பல் சொத்தையை ஏற்படுத்தும்.
எனவே நல்ல வாய் சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம். பற்களில் படியும் பாக்டீரியாக்களை நீக்குவதன் மூலம் பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களைத் தடுக்கலாம்.