கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன?

கல்லீரலுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நம்முடைய உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பாகம் கல்லீரல் ஆகும். அது மிகவும் நுட்பமான உறுப்பாக நமது உடலில் செயல்படுகிறது. அதனுடைய முக்கியமான வேலை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, கொழுப்பை தேவையான அளவு இருப்பில் வைப்பது, இரும்புச் சத்தை பராமரிப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் கல்லீரல் கட்டுப்பாட்டில் இருப்பவை. மேலும், உடலுக்கு தேவையான புரதம் உற்பத்தி செய்யப்படுவதிலும் கல்லீரலின் உதவி மிகவும் அவசியம்.
அப்படிப்பட்ட முக்கியமான கல்லீரல் ஏதேனும் நோயால் பாதிக்கப்படும் பொழுது உடலில் உள்ள பல இயக்கங்களை அது பாதித்து விடுகிறது. கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது திடீரென்று உடல்நல குறைவு ஏற்படுவது, வாந்தி, மயக்கம், களைப்பு, உடல் எடை திடீரென குறைவது உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கல்லீரலை பொறுத்தவரை அது தன்னைத்தானே ஓரளவுக்கு சீர்படுத்திக் கொள்ளும் தன்மை உடையதாக இருந்தாலும், 75 சதவீதத்துக்கு மேல் அதனுடைய திசுக்கள் பாதிப்படையும் பொழுது உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கு பொதுவான சில வழிமுறைகள் இருக்கின்றன. அதாவது வாய் துர்நாற்றம், கண்களில் கருவளையம் ஏற்படுவது, தோல் நோய்கள், செரிமான பிரச்சனை, கண்களில் மஞ்சள் நிறம் தென்படுதல், வாய் கசப்பாக இருப்பது, வயிறு வீக்கம் தென்படுதல் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்.
அத்துடன், கல்லீரலுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் எப்படிப்பட்ட மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ள வேண்டிய சில பொதுவான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நெல்லிக்காய் என்பது விட்டமின் சி அதிகம் உள்ள ஒரு இயற்கையின் வரமாகும். நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் இரண்டுமே நன்மையை தருவது என்றாலும் பெரிய சைஸ் உள்ள நெல்லிக்கனி பல நன்மைகளை கொண்டதாக இருக்கிறது. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் நெல்லிக்கனி சாப்பிடும் பொழுது கல்லீரல் செயல்பாடு நல்ல விதமாக அமையும்.
மஞ்சள் என்பது மனித உடலுக்கு பல்வேறு நலன்களை தரக்கூடிய பொருளாகும். குறிப்பாக, ஹெப்பாட்டிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்கு காரணமான வைரஸ் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதனால் வாரத்தில் நான்கு ஐந்து நாட்கள் பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகலாம். அல்லது மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேனில் மஞ்சள் தூள் கலந்தும் பருகலாம்.
பப்பாளிப்பழம் கல்லீரலின் செயல்பாட்டிற்கு உற்ற துணையாக அமைகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பப்பாளி பழம் உண்பதன் மூலம் அல்லது பப்பாளி ஜூஸ் தயார் செய்து பருகுவதன் மூலம் கல்லீரலில் சிறப்பான செயல்பாட்டுக்கு நாம் ஒரு தூண்டுதலை ஏற்படுத்த முடியும்.
கல்லீரலை பாதுகாப்பதில் பசுமையான காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தினமும் பசுமையான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் பித்த நீர் நன்றாக சுரந்து கல்லீரலின் வேலைப்பளு குறைகிறது.