தாம்பத்ய குறைபாட்டை போக்கும் உணவுகள்


தாம்பத்ய குறைபாட்டை போக்கும் உணவுகள்
x
தினத்தந்தி 30 March 2025 2:20 PM IST (Updated: 30 March 2025 2:21 PM IST)
t-max-icont-min-icon

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது.

மனித உடலானது உணர்வுகளால் பின்னி பிணைந்தது. உள்ளத்தில் தோன்றும் உணர்வுகள் உடலில் பிரதிபலிக்கிறது. அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உடல் உள்ளது. பசி, தாகம், ஓய்வு, தூக்கம் இவற்றைப் போன்று தாம்பத்திய வாழ்வும், உடலோடும் உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இது மனித வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சமாகும். இது கணவன், மனைவி உறவை பிணைக்கக் கூடிய முக்கியமான ஒன்று.

பல ஆண்களுக்கு ஆரம்ப கால தாம்பத்ய வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், நாளாக தாம்பத்தியத்தின் ஏதோ ஒரு பகுதியில் திருப்தியில்லாத நிலைகளால் மன ரீதியாக பாதிப்புக்குள்ளாகி, தொடர்ந்து உடலிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது.

உடல் நல பிரச்சினைகளில், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா மற்றும் மன நல பிரச்சனைகளில் தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம்,மனக்கவலைகள் முக்கியமானது. தாம்பத்தியத்தில் ஏற்படும் நாட்பட்ட குறைகளுக்காக ஆண்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிப்படைகிறார்கள். ஆகவே இந்த தாம்பத்ய குறைபாடு பிரச்சினை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

உணவில் குறிப்பிட்ட அமினோ அமிலங்கள், உயிர்ச்சத்துக்கள், ஹார்மோன்கள் ஆகியவை இல்லற வாழ்வில் திருப்தியைத் தருபவை. அதன் விவரம்:

ஆர்ஜினின்: இந்த அமினோ அமிலம் நிறைந்த உணவு வகைகளை தினசரி உணவில் எடுத்து வந்தாலே போதும். ஏனெனில் இது ரத்தத்திலுள்ள நைட்ரிக் ஆக்சைடு அளவை சீராக்கி ஆண் குறிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த அடைப்புகளை நீக்குகிறது. சைவ உணவுகளில், பீட்ரூட், பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி, மற்றும் அசைவ உணவுகளில் சிக்கன், வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், சூரை மீன், கணவாய், இறால், நண்டு, முட்டை, பால் போன்றவற்றில் ஆர்ஜினின் அதிகமாக உள்ளது.

கார்னிடைன்: இதுவும் அமினோ அமிலம். இது ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இரத்த குழல்களை நெகிழ்வடையச் செய்து, நைட்ரிக் ஆக்சைடன் தூண்டுதலால் கவர்னோசா சதைகளை இரத்தத்தால் நிரப்புகிறது. உணவு வகைகளில் சிகப்பு இறைச்சி வகைகள், சிக்கன், பால், வெண்ணெய், முட்டை,சூரை மீன், சுறா மீன், மத்திச் சாளை , கணவாய், பீட்ரூட், பூசணி விதைகள் ஆகியவற்றில் கார்னிடைன் உள்ளது.

புரோமிலென் என்ற என்சைம் வாழைப்பழத்தில் அதிகளவு உள்ளது, இது மனதில் தாம்பத்ய ஆசையை அதிகரிக்கிறது. குறிப்பாக நேந்திர வாழைப்பழம், செவ்வாழைப்பழம் சிறந்தது.

அவகோடா: இது விதைப்பை மரம் (Testicle Tree) என்றழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரதங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.

லைக்கோபீன்: இது தக்காளியில் உள்ள முக்கியமான அமினோ அமிலம். புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம், வளர்ச்சி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு தக்காளியில் உள்ள லைக்கோபீன் ஒரு அருமருந்து.

சிட்ருலின்: இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகும். இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, இரத்த நாடி, நாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தர்ப்பூசணி, ஆரஞ்சு, சாக்லேட், எலுமிச்சை பழங்களில் அதிகமாக உள்ளது.

டைரோசின்: இந்த அமினோ அமிலம் அதிகரிக்கும்போது உடலில் "டோபமைன் "அளவும் அதிகரிக்கிறது, இது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. இது தன்னம்பிக்கைக்குரிய ஹார்மோன் ஆகும். பூசணி விதைகள், எள் இவற்றில் போதுமான அளவு உள்ளது.

ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள்: இவை உடலில் உள்ள இரத்த நாடி, நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இது ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பிளாக்ஸ் விதைகள், பாதாம், மத்திச் சாளை மீன், சூரை மீன், கணவாய் இவைகளில் ஒமேகா அமிலங்கள் அதிகளவில் உள்ளது.

உணவுகளில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, கேரட், பீட்ரூட், முருங்கைக் காய், முருங்கை கீரை, முருங்கை பூ, முருங்கை விதை, தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பேரீச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், பாதாம், பிஸ்தா, முந்திரிபருப்பு, கடல் உணவுகளில் சூரை மீன், கணவாய், சிப்பி, நண்டு, வாழை மீன், சுறா, இறைச்சி வகைகளில் நாட்டுக்கோழி, வான்கோழி, முட்டை இவைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

கருப்புத் திராட்சையின் தோல் மற்றும் விதைகளில் உள்ள "ரெஸ்வெட்ரால்"என்ற தாவர வேதிப்பொருள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, இரத்த தமனிகளில் உள்ள அடைப்புகளை நீக்கி இரத்த சுற்றோட்டத்தை அதிகரிக்கிறது.

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கரா கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமிசர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை, சாலாமிசிரி, சாரப்பருப்பு போன்றவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்யத்தில் திருப்தியைத் தரும்.


Next Story