முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற இதை ட்ரை பண்ணுங்க


முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற இதை ட்ரை பண்ணுங்க
x

புகைப்பிடிப்பது முதுகு வலியின் அபாயத்தை அதிகரிப்பதால் அந்த பழக்கத்தை நிறுத்தவேண்டும்.

முதுகு வலி என்பது இன்றைக்கு ஏறக்குறைய அனைவரையும் பாதிப்படையச் செய்கிறது. முதுகுத் தசை அல்லது தசைநார்களில் ஏற்படும் பிடிப்புகள், அதிக எடை தூக்குதல் அல்லது மேடு பள்ளமான படுக்கைகளில் படுப்பது, முதுகுத் தண்டுவட வட்டுகளில் ஏற்படும் வீக்கம், அல்லது வட்டுகள் விலகுதல் காரணமாக வட்டுக்குள் இருக்கும் மென்மையான பொருள் வீங்கி அல்லது உடைந்து தண்டுவட நரம்பில் அழுத்தும்போது முதுகு வலி ஏற்படும்.

கீல்வாத நோய்களிலும் முதுகு வலி ஏற்படும். முதுகுத் தண்டுவட வட்டுகள், எலும்புகள் சுருங்குவது (முதுகெலும்பு ஸ்டெனோசிஸ்), எலும்புகளின் வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்), முதுகெலும்பில் ஏற்படும் அழற்சி நோய் (அன்கிலோசிங் ஸ்பான்டைலைடிஸ்) ஆகிய பாதிப்பினாலும் முதுகு வலி ஏற்படும்.

முதுகு வலியின் அறிகுறிகள்

முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல், காலையில் முதுகெலும்பு விறைப்பாகவும் மற்றும் முதுகில் வலி அதிகமாக ஏற்படுதல், அதிக நேரம் உட்கார்ந்திருந்தால், நின்று கொண்டிருந்தால் வலி அதிகமாகுதல், எரிச்சல், சூடு அல்லது குத்துதல் போன்ற உணர்வு ஏற்படுதல். மேலும் வலி முதுகிலிருந்து கால் வரை பரவக்கூடும். குனிதல், தூக்குதல், நடத்தல் இவை வலியை மோசமாக்கும்.

உடற்பயிற்சிகள், உணவுப் பழக்கவழக்கங்கள்:

குறைந்த அளவிலான ஏரோபிக் செயல்பாடுகள் முதுகில் வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும். மேலும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் பலன்தரும். வயிறு மற்றும் முதுகு தசை பயிற்சிகள், ஆரோக்கியமான உடல் எடை பராமரிப்பு அவசியம்.

புகைப்பிடிப்பது முதுகுவலியின் அபாயத்தை அதிகரிப்பதால் அந்த பழக்கத்தை நிறுத்தவேண்டும். முதுகை அழுத்தும் அசைவுகளைத் தவிர்க்கவேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவது கூடாது. கனமான பொருட்கள் தூக்குதலைத் தவிர்க்கவேண்டும்.

எலும்புகள் வலுப்பெற பால், தயிர், பாலாடை கட்டி, முருங்கைக்கீரை, எள், முட்டைக்கோஸ், புரக்கோலி, முட்டை, கடல் உணவுகள், இறைச்சி வகைகள், வெந்தயக்கீரை, பாலக்கீரை, முடவாட்டுக்கால் கிழங்கு, பிரண்டைத் தண்டு, சோயா பீன், பாதாம், பிஸ்தா, கருப்பு உளுந்து, பேரீச்சை, அத்திப்பழம் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் ரத்தத்தில் சீரான வைட்டமின் டி அளவை பராமரிக்க வேண்டும்.

சித்த மருத்துவம்

1) அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை இரண்டு வேளை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

2) சேராங்கொட்டை நெய்- 5 முதல் 10 மி.லி. இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

3) முதுகில் வலி உள்ள இடத்தில் வாதகேசரி தைலம், கற்பூராதி தைலம் இவற்றை தேய்த்து நொச்சி, தழுதாழை, வாதநாராயணன் இலைகளை வதக்கி இளம் சூட்டில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.

1 More update

Next Story