தைராய்டு சுரப்பி குறைபாடா..? இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது

தைராய்டு சுரப்பி குறைபாடு ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
மருத்துவ ரீதியாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். மனிதனின் கழுத்தில் உள்ள பட்டாம் பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. உடல் தனக்கு கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி கொள்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் இது உதவுகிறது. தைராய்டு சுரப்பி குறைபாடு (ஹைப்போ தைராய்டிசம்) இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்
முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி மற்றும் முள்ளங்கி. இதில் உள்ள காயிட்ரோஜன் தைராய்டு சுரப்பி உற்பத்தியை குறைக்கிறது. சோயாபீன்ஸ், சோயா பால், டோபு. இவற்றில் உள்ள காயிட்ரோஜன் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் தைராய்டு செயல்பாட்டை தடுக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அல்லது உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள், காபி (இது தைராய்டு மாத்திரைகள் உட்கொண்ட பின்னர், அவை வயிற்றில் இருந்து ரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கிறது), மது பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள்.
தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
உணவில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டும். மீன், இறால், பால் பொருட்கள், முட்டை, செலீனியம் நிறைந்த உணவுகள் (கடல் உணவுகள், கோழி, காளான், பூண்டு), ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் (சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள், ஆளி விதைகள், அக்ரூட்), முழு தானியங்கள் (பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை), மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் பெக்டின்கள் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யப்படும் எச்.பி.ஏ1சி (HbA1c) ரத்த பரிசோதனையில் ஒரு பொய்யான உயர்வை ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுத்த கூடும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பியல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.