சர்க்கரை நோயுடன் வேறு குறைபாடுகள் இருந்தால் செய்ய வேண்டியது என்ன?

சர்க்கரை நோயுடன் வேறு குறைபாடுகள் இருந்தால் எச்.பி.ஏ1சி பரிசோதனை முடிவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு வேறு சில குறைபாடுகள் மற்றும் இணை நோய்களும் இருக்கும். அவர்கள் ரத்த சர்க்கரை அளவை சரியான முறையில் நிர்வகிக்கவேண்டியது அவசியம். சிலர் ரத்த சோகை நோயும் சேர்ந்து இருந்தால் மாதந்தோறும் ரத்த சர்க்கரை டெஸ்ட் செய்து கொள்வதற்கு பதிலாக 3 மாதத்திற்கு ஒரு முறை எச்.பி.ஏ1சி டெஸ்ட் மட்டும் செய்து கொள்ளலாமா? என நினைப்பதுண்டு. இப்படி முயற்சி செய்வது தவறாகும். வேறு குறைபாடுகள் இருந்தால் எச்.பி.ஏ1சி பரிசோதனை முடிவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
கீழ்க்கண்ட காரணங்களால் எச்.பி.ஏ1சி பரிசோதனை ஒரு பொய்யான சர்க்கரை உயர்தல் அல்லது குறைதல் ஏற்படுத்தலாம்.
1) கர்ப்ப காலம், 2) வயது முதிர்வு, 3) சிறுநீரக செயலிழப்பு, 4) கல்லீரல் நோய், 5) இரும்பு சத்து குறைபாடு ரத்த சோகை, 6) அரிவாள் ரத்த சோகை நோய், 7) ரத்த அழிவு சோகை (தலசீமியா), 8) சமீபத்திய ரத்த மாற்றம், 9) ரத்த இழப்பு, 10) ஹீமோகுளோபின் மாறுபாடுகள், 11) மருந்துகளின் பக்க விளைவுகள் (ஸ்டீராய்டு, அதிக டோஸ் அஸ்பிரின், வைட்டமின் சி), 12) வைட்டமின் பி 12 மற்றும் போலேட் குறைபாடு, 13) ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளசரைட் (டெசிலிட்டருக்கு 1750 மில்லிகிராமுக்கும் அதிகமாக இருத்தல்), 14) நாள்பட்ட மதுப்பழக்கம், 15) சிவப்பணு சிதைவு (ஹீமோலைசிஸ்), 16) உயரமான பிரதேசங்களில் வசிப்பது.
சர்க்கரை நோயை நிர்வகிப்பதற்கு எச்.பி.ஏ1சி ஒரு மிக சிறந்த பரிசோதனையாக இருந்தாலும் மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் இருந்தால், சாப்பிடும் முன்னர் மற்றும் சாப்பிட்ட பின்னர் உள்ள ரத்த சர்க்கரை அளவையும், பிரக்டோஸமைன் அளவு, தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (சி.ஜி.எம்) ஆகியவற்றையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் எச்.பி.ஏ1சி பரிசோதனையை மட்டும் சார்ந்து இல்லாமல், சாப்பிடும் முன்னர் (பாஸ்டிங்) மற்றும் சாப்பிட்ட பின்னர் (போஸ்ட் ப்ராண்டியல்) ரத்த சர்க்கரை அளவையும் மாதந்தோறும் பரிசோதித்துக் கொண்டால், சர்க்கரை நோயை திறம்பட நிர்வகிக்க அது மிகவும் உதவியாக இருக்கும்.