சர்க்கரை நோயாளிகள் உடலில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு சில சமயம் உட்கொள்ளும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளால் கூட அரிப்பு ஏற்படலாம்.
அரிப்பு என்பது தோல் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பகுதியை சொரிய தூண்டும் ஒரு உணர்வாகும். சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு அரிப்பு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அரிப்பு ஏற்படுவதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
உடலில் அரிப்புக்கான காரணங்கள்
1) சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அதிகமாகும் போது சிறுநீரில் குளுக்கோஸுடன் சேர்ந்து நீர் சத்தும் வெளியேறுவதால் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்பட்டு அதனால் அரிப்பு உண்டாகலாம்.
2) சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பியல் பாதிப்பு (டயாபடிக் பாலிநியூரோபதி). இதில் நரம்பு நுணிகளில் உள்ள 'சி' இழைகள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படலாம்.
3) ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு ஒரு சாதகமான சூழ்நிலை அமைந்து அதனால் அரிப்பு உண்டாகலாம். இது பெரும்பாலும் அதிகம் வியர்க்க கூடிய இடங்களில் காணப்படும்.
4) சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு குருதி ஓட்டம் குறைந்து தோலுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதால் தோலில் வறட்சி அல்லது தொற்று ஏற்பட்டு அரிப்பு உண்டாகலாம்.
5) ரத்த சர்க்கரை கட்டுக்குள் இல்லாதபோது சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதால் அதன் காரணமாக அரிப்பு ஏற்படலாம்.
6) சில சமயம் உட்கொள்ளும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளால் கூட அரிப்பு ஏற்படலாம். (எ.கா ) மெட்பார்மின், கிளைக்கிளைசைட்.
7) ரத்தச் சர்க்கரை அதிகமாகும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து அதனால் தோல் தொற்று ஏற்பட்டு அரிப்பு ஏற்படலாம். அதுமட்டுமல்ல ரத்த சர்க்கரையை அதிகமாகும்போது நோய் எதிர்ப்பு செல்களில் இருந்து சைட்டோகைன்ஸ் வெளியேற்றப்பட்டு அதனால் அரிப்பு உண்டாகலாம்.
பாதுகாப்பு வழிமுறைகள்
இதற்கு தீர்வாக ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க கூடாது. தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்க மருத்துவரை கலந்தாலோசித்து தோல் ஈரத்தன்மை தக்க வைக்கும் கிரீம்களை உபயோகிக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். மனஅழுத்தம் அரிப்பை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளதால் தியானம் மற்றும் யோகா செய்யலாம். பெரும்பாலும் பருத்தி ஆடைகளையே அணிவது சிறந்தது.