தீராத மலச்சிக்கலா..? வயிற்றை சுத்தப்படுத்த இதை செய்யுங்கள்..!

வயிற்றை சுத்தமாக காலி பண்ணாமல் விட்டால் நாள்பட்ட மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும்.
மனிதனின் அன்றாட வாழ்க்கையில், பாத்ரூமுக்குப் போய் வருவது கூட, தினமும் ஒரு புதுப்புது அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. மலச்சிக்கல் என்பது சிலருக்கு இது தற்காலிக பிரச்சினை, சிலருக்கு இது தீராத, நிரந்தர பிரச்சினை. மலச்சிக்கல் ஆரம்பிக்கும் இடம் உணவுப்பழக்கம் தான் என்றாலும், உடலில் மலச்சிக்கல் ஆரம்பிக்கும் இடம் பெருங்குடல் ஆகும்.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும்போது வயிற்றை காலி பண்ண பாத்ரூமுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் கூட, அவர்களின் உடல் அந்த செயலுக்கு கொண்டு வராது. வெறும் எண்ணம் மட்டும்தான் இருக்கும். ஆனால் அது உபயோகப்படாது. மலச்சிக்கலினால் கஷ்டப்படுபவர்கள், வயிற்றை சுத்தப்படுத்துவதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அனுபவித்தவர்களிடம் கேட்டால் தான் தெரியும்.
மலச்சிக்கல் பிரச்சினையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
1). மலக்கழிவு மிகமிக மெதுவாக பெருங்குடல் வழியாக வருவது
2). இடுப்புத் தசைகளின் ஒத்துழைப்பு இல்லாமை. கழிவு பெருங்குடலைக் கடந்து மலக்குடலுக்கு வரும்போது, பெருங்குடலிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் , மலக்கழிவு அதிக கடினமாகவும், அதிகமாக உலர்ந்தும் போய்விடுகிறது. இதனால் மலத்திடக் கழிவு, மலக்குடலை விட்டு வெளியே வர மிகவும் சிரமப்படுகிறது. மேலும், இடுப்புத் தசைகளும் இறுக்கமாகி விடுவதால், மலக்கழிவு வெளியே வர இன்னும் அதிகமாக சிரமப்படுகிறது. இந்த இடுப்புத் தசைகள் இறுக்கமாகுவது கர்ப்ப காலங்களிலும், குழந்தை பிறப்பு காலங்களிலும், வயதான காலங்களிலும் அதிகமாக ஏற்பட வாய்ப்புண்டு.
வயிற்றை காலி பண்ண கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்:
1). இந்தியன் டாய்லெட்டில் உட்கார்ந்து மலம் கழிப்பது நல்லது. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்காரும்போது, குத்துக்கால் போட்டு உட்காருவது மாதிரிதான் அமர வேண்டும். இப்படி உட்காரும்போது, மலக்குடல் பாதை, மலத்தை வெளியே தள்ளும் பாதைக்கு நேராக, செங்குத்தாக இருக்கிறது. இப்படி இருந்தால், மலக்கழிவு மிகச்சுலபமாக, மிகச் சாதாரணமாக எந்தவித சிரமமும் இல்லாமல் வெளிவந்துவிடும்.
ஒருநாள்கூட வயிற்றை சுத்தமாக காலி பண்ணாமல் விடுவதும் தவறுதான். ஏனெனில், இதுவே ஒவ்வொரு நாளும் தொடருமானால் அது நாள்பட்ட மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும்.
நடத்தல், நீந்துதல் , நடனமாடுதல், விளையாடுதல், மெதுவாக ஓடுதல், இவை எல்லாமே பெருங்குடலுக்கு அசைவுகளைக் கொடுத்து, வயிற்றைக் காலி பண்ண வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும்.
அதிக அளவில் மிதமான வெந்நீர் குடிக்க வேண்டும். புதினா டீ , புதினா சாறு போன்றவை செரிமானத்திற்கு நல்லது. இதன்மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புரூன்ஸ் , பப்பாளி பழங்கள் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்லது. இது நல்ல மலமிளக்கி ஆகும்.
காலையில் எழுந்தவுடன் வயிற்றுக்கு மசாஜ் கொடுத்தால், குடல் தசைகளில் அசைவு ஏற்பட்டு, பெருங்குடலில் நகர்வு ஏற்படும். இது மலம் வெளியே வர மிகவும் உதவும். காலையில் எழுந்தவுடன், ஓரிடத்தில் நல்ல அழுத்தமாக உட்காரக்கூடாது. வெந்நீரைக் குடித்துவிட்டு, வீட்டுக்குள்ளேயே நடந்துகொண்டே ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும். இது பெருங்குடல் அசைவுக்கு மிகவும் உதவும்.
இரவில் எளிதில் ஜீரணமாகாத பரோட்டா போன்ற கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு உணவு சீக்கிரமாக சாப்பிடவேண்டும். வயிறு தினமும் சுத்தமாக காலியாகிவிட்டால், அன்றைய நாள் மிகமிக சுறுசுறுப்பாகவும், சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள், உணவுப்பழக்கத்தையும் , வாழ்வியல் பழக்கத்தையும் மாற்ற வேண்டும். மன நலமும், உடல் நலமும் ஒழுங்காக இருந்தால் , மலச்சிக்கல் பிரச்சினை வரவே வராது.