கொதிக்க வைத்தல் - ஊற வைத்தல்: வெந்தய நீரை எப்படி குடிப்பது நல்லது?

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து வெந்தய நீர் தயாரிப்பது எளிதானது, தினசரி பருகுவதற்கு ஏற்றது.
செரிமானத்தை மேம்படுத்துவது முதல் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வு அளிக்கக்கூடியது வெந்தயம். இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரை பருகுவது நல்லதா? வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து குடிப்பது சரியானதா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. எது சிறந்தது என்று பார்ப்போம்.
ஊறவைத்த நீர்:
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைக்கும்போது அவை நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை வெளியிடும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் செரிமானத்தை மேம்படுத்தும். அசிடிட்டி பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவிடும்.
ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வழிவகுக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் நன்மை பயக்கும். எனினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே நீரிழிவு நோயாளிகள் இதனை பருக வேண்டும்.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தயாரிப்பது எளிதானது, தினசரி பருகுவதற்கு ஏற்றது.
கொதிக்க வைத்த நீர்:
வெந்தயத்தை நீரில் கொதிக்க வைக்கும்போது அதிலிருக்கும் சேர்மங்களை பிரித்தெடுத்து சக்தி வாய்ந்த பானமாக மாற்றும்.
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் நச்சு நீக்கும் பானமாக செயல்படும்.
சளி, இருமல், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
கொழுப்பை சீராக நிர்வகிக்கும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
(இருப்பினும் வேகவைத்த வெந்தய நீர் கசாயம் போல் சற்று கடினமான சுவையை கொண்டிருக்கும். தினசரி பருகுவது அனைவருக்கும் பொருந்தாது).
வேறுபாடுகள்
ஊறவைத்த நீர் இயற்கையான நொதிகளை தக்கவைத்து வயிற்றுக்கு இதமானதாக இருக்கும்.
வேகவைத்த நீர் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் சேர்மங்களை வெளியிடும். ஆனால் வெப்பத்தன்மை காரணமாக சில ஊட்டச்சத்துக்களை இழக்கக்கூடும்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஊற வைத்த நீர் தினசரி பருகுவதற்கு ஏற்றது. வேக வைத்த நீர் குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகளின்போது மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவானது.
எதை தேர்வு செய்வது?
தினசரி உடல் ஆரோக்கியம், உடல் எடையை சீராக பேண ஊறவைத்த நீர் சிறந்தது.
பருவ காலநிலை மாற்றத்தின்போது ஏற்படும் சளி, இருமல், நச்சுக்களை போக்க வெந்தயம் கொதிக்க வைத்த நீர் பயனுள்ளதாக இருக்கும்.
வெந்தய நீரை தினமும் ஒரு டம்ளருக்கு மேல் குடிக்கக்கூடாது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பருக வேண்டும். தினசரி பருகுவதற்கு வெந்தயத்தை ஊறவைத்த நீர்தான் சிறந்தது.






