பிளாக் டீ, பிளாக் காபி.. எது உடலுக்கு நல்லது?
பிளாக் காபி, பிளாக் டீ இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும்.
டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டில் எந்த பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.
கருப்பு காபி (பிளாக் காபி):
பிளாக் காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
மேலும் பிளாக் காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் பிளாக் காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், ‘பிளாக் காபி குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். பிளாக் காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
கருப்பு தேநீர் (பிளாக் டீ):
பிளாக் காபி, பிளாக் டீ இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பிளாக் டீயை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக பிளாக் டீ விளங்குகிறது. ஒரு கப் பிளாக் டீயில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.
எது சிறந்தது?
இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் பிளாக் காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது. சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாக் காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் பிளாக் காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் பிளாக் டீ சிறந்த தேர்வாக அமையும்.








