எல்லா டெஸ்ட்டும் ஓகே.. ஆனால் படபடப்பு மட்டும் குறையவில்லை: தீர்வு என்ன?


எல்லா டெஸ்ட்டும் ஓகே.. ஆனால் படபடப்பு மட்டும் குறையவில்லை: தீர்வு என்ன?
x
தினத்தந்தி 15 Aug 2025 6:15 AM IST (Updated: 15 Aug 2025 6:15 AM IST)
t-max-icont-min-icon

வாழ்வியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளினால் நெஞ்சு படபடப்பு வருகிறதென்றால், தன்னைத்தானே தேற்றிக்கொண்டு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சிலர் சாதாரண விஷயங்களுக்கெல்லாம் பதற்றம் அடைவார்கள். அப்போது இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக இதய படபடப்பு இருக்கும். இதுதொடர்பான மருத்துவ பரிசோதனைகளில் எல்லாம் சரியாகவே இருக்கும். ஆனால் படபடப்பு மட்டும் குறையாது.

இதய படபடப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உடலிலுள்ள நோயினால் இதயத் துடிப்பு அதிகமாவது ஒரு காரணம். உடலில் ஒரு நோயும் இல்லாதபோதும் இதயத்துடிப்பு அதிகமாவதற்கு அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள், பதற்றம், கோபம், மன அழுத்தம், சண்டை, சச்சரவு, கூச்சல், குழப்பம் போன்றவைகள் முக்கிய காரணம்.

ஆஸ்துமா நோய்க்கு உபயோகப்படுத்தும் மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கம், தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக செயல்படுவது, இதய வால்வு பிரச்சினைகள், உடலில் நீர்ச்சத்து குறைந்து போதல், ரத்த சர்க்கரை அளவு குறைவு, ரத்த சோகை, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் அளவுகளின் மாறுபாடு இவைகள் எல்லாமே இதயத் துடிப்பை அதிகமாக்கி விடக்கூடிய காரணங்களாகும்.

எப்பொழுது நாம் கவனமாக இருக்க வேண்டும்?

நெஞ்சு வலியோடு சேர்ந்து அதிக இதயத் துடிப்பு ஏற்பட்டால், அதிகமாக மேல் மூச்சு வாங்கினால், மயக்கத்தோடு சேர்ந்து ஏற்பட்டால், இருதய நோய் ஏற்கனவே இருப்பவர்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக இதய நோய் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

உடலிலுள்ள நோய் பிரச்சினைகளினால் நெஞ்சு படபடப்பு வருகிறதென்றால், சம்பந்தப்பட்ட துறை மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். வாழ்வியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளினால் நெஞ்சு படபடப்பு வருகிறதென்றால், முதலில் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளவேண்டும். சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டும். இதுவும் கடந்துபோகும் என்று நினைத்துக் கொள்ளவேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பிறரிடம் காட்டும் கடுமை, கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

இதயத் துடிதுடிப்பு என்பது பயப்படக்கூடிய நோய் அல்ல. ஓய்வாக இருக்கும்போதும் சிலருக்கு வரும். வேலை செய்துகொண்டிருக்கும் போதும் சிலருக்கு வரும். இது சில நொடிகளே இருக்கும். பின் சரியாகிவிடும். காய்ச்சல், மாதவிடாய் நேரம், கர்ப்ப காலம், மாதவிடாய் நிற்கின்ற நேரம் போன்ற சமயங்களிலும் நெஞ்சு படபடப்பு ஏற்படும். பயப்பட வேண்டாம்.

நெஞ்சு வலி, நெஞ்சு இறுக்கம், நெஞ்சு கனம், மூச்சுத் திணறல், மயக்கம் இவைகளோடு சேர்ந்து நெஞ்சு படபடப்பு வந்தால் உடனே இதய நோய் சிகிச்சை நிபுணரிடம் உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம்.

நெஞ்சு படபடப்பு, நோய் இருந்தாலும் வரும், நோய் இல்லாமல் இருந்தாலும் வரும். இதய படபடப்பு உணர்ச்சியோடு, மனதோடு சேர்ந்தது. மனம், இதயம் இரண்டையும் பத்திரமாக பார்த்துக்கொண்டு, ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும்.

1 More update

Next Story