கடலூரில் தென்பெண்ணை ஆற்று திருவிழா கோலாகலம் - ஏராளமான மக்கள் பங்கேற்பு
கடலூரில் தென்பெண்ணை ஆற்று திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கடலூர்,
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் தென்பெண்ணை ஆற்று திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின்போது, சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு தென்பெண்ணை ஆற்று திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தென்பெண்ணை ஆற்றில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளநீர் வடிந்த நிலையில், மிகுந்த பாதுகாப்புடன் இன்று தென்பெண்ணை ஆற்று திருவிழா நடைபெற்றுள்ளது.
இந்த திருவிழாவையொட்டி கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருந்து காலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட சாமி சிலைகள் தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் படகுகள் மூலம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.