திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!
பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற 'தேவார நாயன்மார்களுக்கு' நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிகாட்டுதலில் சம்ஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மண்டபத்தில் சத்குரு குருகுல மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடினர். இதில் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான சிவனடியார்களும் பக்தர்களும் பங்கேற்று தேவாரப் பாடல்களை கேட்டு, பாடிய மாணவர்களை பாராட்டினர்.
முன்னதாக இந்நிகழ்ச்சி பேரூர் ஆதீனம், காமாட்சிபுரம் ஆதீனம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர், சிரவை ஆதீனம், மயிலை கபாலீஸ்வரர், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர், கொடுமுடி மகுடேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்றது.