மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு

கூட்ட நெரிசலை தவிர்க்க, மண்டல பூஜை மற்றும் அதற்கு முந்தைய நாள் சாமி தரிசனம் செய்ய குறைந்த அளவிலான பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது
திருவனந்தபுரம்,
சபரிமலையில் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய மண்டல பூஜை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்பட்டது. நடப்பு மண்டல பூஜை சீசனில் 31 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். மண்டல பூஜை முடிந்து 27-ஆம் தேதி முடிந்த நிலையில், அன்றைய தினம் இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. நாளை (31-ஆம் தேதி) இந்த சீசனுக்கான மகரவிளக்கு பூஜை தொடங்குகிறது.
சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 10-ஆம் தேதி வரை முடிந்துவிட்டது. சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் நிலவும் சூழ்நிலையைப் பொருத்து, உடனடி முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையை தினமும் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலை தவிர்க்க, மண்டல பூஜை மற்றும் அதற்கு முந்தைய நாள் சாமி தரிசனம் செய்ய குறைந்த அளவிலான பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. மகரவிளக்கு பூஜையின் போதும் அந்த முறையே கடைபிடிக்கப்படுகிறது.ஆன்லைன் முன்பதிவில், மகரவிளக்கு பூஜைக்கு முந்தைய நாளான ஜனவரி 13-ஆம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், மகரவிளக்கு பூஜை நடைபெறும் ஜனவரி 14-ஆம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.






