பஞ்ச துவாரகை தலங்கள்
கோமதி துவாரகை கோவிலானது, பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும்.
பகவான் கிருஷ்ணர் துவாபரயுகத்தில் ஆட்சி செய்த துவாரகை, கடலில் மூழ்கி விட்டதாக சொல்லப்படுகிறது. துவாரகை என்பது ஒரே திவ்ய தேசமாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட தலங்களை சேர்த்து 'பஞ்ச துவாரகைகள்' என அழைக்கப்படுகின்றன. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இந்த கோவில்கள் அமைந்துள்ளன. அவை வருமாறு:-
1. கோமதி துவாரகை (குஜராத்)
2. பேட் துவாரகை (குஜராத்)
3. டாகோர் துவாரகை (குஜராத்)
4. ஸ்ரீநாத துவாரகை (ராஜஸ்தான்)
5. காங்க்ரோலி துவாரகை (ராஜஸ்தான்)
இந்த கோவில்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனை தரிசனம் செய்வது பஞ்ச துவாரகை தரிசனம் எனப்படுகிறது.
கோமதி துவாரகை
துவாரகாதீசர் கோவில் என அழைக்கப்படும் இந்த தலம் குஜராத் மாநிலம் துவாரகை நகரின் கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்ற தலமாகும்.
உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபியால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகாநாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள்.
பேட் துவாரகை
பேட் துவாரகை என்பது கட்ச் வளைகுடாவில் உள்ள சிறு தீவு ஆகும். துவாரகை நகரிலிருந்து ஒகா கடற்கரை வரை பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரகையை அடையலாம். இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளி இருக்கும் கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி என்று அழைக்கின்றனர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும்.
கோமதி துவாரகையும், பேட் துவாரகையும் சேர்ந்து துவாரகாபுரி எனப்படும்.
டாகோர் துவாரகை
குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள டாகோர் நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அருள்புரியும் இறைவனின் திருநாமம் ரணசோட்ராய். இந்த பெயரின் பொருள் 'யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்' ஆகும்.
நாத துவாரகை
'நாத துவாரா'என்றால், நாதன் இருக்குமிடத்தின் வாயில், அல்லது நாதனிடம் நம்மை அழைத்துச் செல்லும் வாயில் என்று பொருள். ராஜஸ்தானில், உதய் பூருக்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீநாத்ஜி. இங்கு குழந்தையாக காட்சி தருகிறார் பகவான். இடது கையால் கோவர்த்தனகிரியைச் சுமந்தபடியும், வலது கையை இடுப்பில் ஒய்யாரமாக வைத்தபடியும் அழகு தரிசனம் தருகிறார் ஸ்ரீநாத்ஜி.
காங்க்ரோலி துவாரகை
ஸ்ரீநாத துவாரகாவிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது காங்க்ரோலி துவாரகை. இவ்வூரில் 'ராஜ்சமந்த்' எனும் பெரிய ஆழமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரையில் அழகான இயற்கைச் சூழலில் துவாரகாதீஷ் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சிறிய மூர்த்தமாக கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார் பகவான்.