பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்


பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்
x

பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

பழனி,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி தைப்பூச திருவிழா தொடங்குகிறது.

பழனியை பொறுத்தவரை தைப்பூச திருவிழா தொடங்கும் முன்பே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி கடந்த சில வாரங்களாகவே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் உள்ள இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுகின்றனர். தொடர்ந்து அலகு குத்தி, காவடி எடுத்து ஆடிப்பாடி கிரிவலம் செல்கின்றனர். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று மனமுருக முருகனை வழிபடுகின்றனர்.

மதுரை, திருச்சி, ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வருகின்றனர். இதனால் பழனிக்கு வரக்கூடிய திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலையின் வழியெங்கும் 'அரோகரா' கோஷத்துடன் ஆட்டம், பாட்டத்துடன் பக்தர்கள் வருவதை காணமுடிகிறது. அதேபோல் அலகு குத்தியும், மயில் காவடி, இளநீர்காவடி, பால்காவடி எடுத்தும் பழனிக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பாதயாத்திரை ஒருபுறம் இருந்தாலும் வாகனங்களிலும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்கின்றனர்.

பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அடிவாரம், முருகன் கோவிலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story