ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி இன்று நடக்கிறது.
திருச்சி,
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின்10-ம்நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரருடன் வந்தடைவார்.
அங்கு காலை 10.30 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடுவார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுவார்.
இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைவார். பரமபத வாசல் திறப்பு இன்று இரவு 8 மணியுடன் நிறைவடைகிறது.
நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைவார். அங்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை பொதுஜன சேவை நடைபெறும். பின்னர் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார். இரவு11 மணி முதல் நாளை(20-ந்தேதி) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை4 மணிமுதல் காலை 6 மணிவரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் காலை 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும்.
பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரைஉபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறும். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை(21-ந்தேதி) 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.